போலி கடவுச் சீட்டை பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் ஹிந்தி நடிகையும், மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடையவனுமான அபு சலீமின் காதலி மோனிகா பேடி விடுவிக்கப்பட்டுள்ளார்!
இவ்வழக்கை விசாரித்த மத்திய பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் உள்ள குற்றவியல் தலைமை நடுவர் மன்ற நீதிபதி அஜய் ஸ்ரீவாத்சவா, மோனிகாவிற்கு எதிரான வழக்கை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது என்று கூறி மோனிகா பேடியை விடுதலை செய்தார்.
போலி கடவுச் சீட்டை பயன்படுத்தினார் என்பதனை நிரூபிக்கத் தவறிய அரசுப் பொது வழக்கறிஞரையும், அதற்கு காரணமான காவல் துறைக்கு எதிராகவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி அஜய் ஸ்ரீவாத்சவா பரிந்துரைத்துள்ளார்.
"நோட்டரி கலில் புல்லா, தலைமைக் காவலர் இர்ஃபான் அகமது, போபால் நகராட்சியின் உதவிக் கண்காணிப்பாளா உமா சங்கர், மண்டல கடவுச் சீட்டு அலுவலக அதிகாரி அமார் லாக்ரா, எழுத்தர் இந்து எஸ். நாயர், ஓய்வு பெற்ற காவல் துணை கண்காணிப்பாளர் ஜே.பி. பாலி, நகராட்சி எழுத்தர் அஜிஸ் ·பாத்திமா, காவல் துணை கண்காணிப்பாளர் எஸ்.கே. சுக்லா ஆகியோர் கொஞ்சமும் பொறுப்பின்றி நடந்து கொண்டுள்ளது வருத்தமளிக்கிறது" என்று நீதிபதி அஜய் ஸ்ரீவாத்சவா கூறியுள்ளார்.