நீதிமன்றங்கள் கணினி மயமாக்கம் : கலாம் துவக்கி வைக்கிறார்

Webdunia

திங்கள், 9 ஜூலை 2007 (16:48 IST)
உச்ச நீதிமன்றத்தில் இருந்து கீழ், கிளை நீதிமன்றங்கள் வரை கணினி மயமாக்கும் தேச திட்டத்தை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இன்று துவக்கி வைக்கிறார்!

தலைநகர் டெல்லியில் இன்று மாலை நடைபெறவுள்ள விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், சட்ட அமைச்சர் பரத்வாஜ், தகவல்தொடர்பு அமைச்சர் ஆ. ராசாஆகியோர் முன்னிலையில் இத்திட்டத்தை அப்துல் கலாம் துவக்கி வைக்கிறார்.

இந்திய நீதித்துறையை கணினிமயமாக்கும் தேச கொள்கை மற்றும் தொழில்நுட்பக் குழு அளித்த பரிந்துரையின்படி, ரூ.854 கோடி செலவில் இத்திட்டம் 3 கட்டங்களாக ஐந்தாண்டுக் காலத்திற்குள் நிறைவேற்றப்படும்.

இத்திட்டத்தின் முதல் கட்டமாக 2500 நீதிமன்ற வளாகங்களில் உள்ள அலுவலகங்கள் அனைத்தும் கணினி மயமாக்கப்படும். கீழ், கிளை நீதிமன்ற நீதிபதிகள் உட்பட 15,000 நீதிபதிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.

மாவட்ட, ஒன்றிய நீதிமன்றங்களில் இருந்து உச்ச நீதிமன்றம் வரை டிஜிட்டல் தொடர்பு ஏற்படுத்தப்படும்.

நீதிமன்றங்களின் தீர்ப்புகள், முக்கிய வழக்குகள் ஆகியன மின் தொகுப்பாக மாற்றப்பட்டு அவைகள் டிஜிட்டல் ஆவணங்களாக உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் பயன்பாட்டிற்கு ஏற்றவையாக அளிக்கப்படும்.

உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகளை கணினியின் வாயிலாகவே பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்படும்.

அந்தந்த மாநில மொழிகளிலும் நீதித்துறையின் அமைப்புகள் தொடர்பான தகவல்களும், மற்ற விவரங்களும் உருவாக்கப்படும்.

முதல்கட்டத்திற்கான திட்டச் செலவு ரூ.442 கோடி. இதில் சட்ட அமைச்சகம் ஏற்கனவே ரூ.187.05 கோடியை தேச தகவல் பரவல் மையத்திற்கு (என்.ஐ.சி.) அளித்துள்ளது. ( ஏ.என்.ஐ )

வெப்துனியாவைப் படிக்கவும்