ஈட்டர் திட்டத்தில் பங்கேற்க அனுமதி!

Webdunia

வியாழன், 5 ஜூலை 2007 (20:30 IST)
ஒளி அணுக்களை ஒன்றிணைத்து உடைத்து அதன் மூலம் வெளியாகும் வெப்ப சக்தியை அணு சக்தியாக மாற்றும் ஈட்டர் என்றழைக்கப்படும் சோதனை ஆய்வில் இந்தியா பங்கேற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது!

தலைநகர் டெல்லியில் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், ரூ.2,500 கோடி அளவிற்கு திட்டமிடப்பட்டு ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், சீனா, கொரியா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்றுள்ள இத்திட்டத்தில் இந்திய விஞ்ஞானிகளும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நாடாளுமன்ற விவகாரம் மற்றும் தகவல் ஒளிபரப்பு அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி கூறினார்.

ஈட்டர் என்றழைக்கப்படும், சர்வதேச தெர்மோ நியூக்ளியர் சோதனை அணு உலை தயாரிப்பு திட்டத்தில் பங்கேற்பதன் மூலம் இத்தொழில்நுட்பத்தில் இந்தியாவின் முன்னேற்றம் வேகமடையும் என்று தாஸ் முன்ஷி கூறினார்.

உலகின் எரிசக்தித் தேவையை கருத்தில் கொண்டு உலகத்தின் முன்னணி தொழில்நுட்ப நாடுகள் பங்கேற்கும் இத்திட்டத்தின் படி, ஒளி அணுக்களை ஒன்று சேர்க்க வைத்து பிறகு அவைகளைப் பிளந்து அதன் மூலம் வெளியேறும் வெப்ப சக்தியைக் கொண்டு அணு மின் சக்தி உருவாக்கப்படும். அதற்கான தனி அணு உலையை உருவாக்குவது இந்தச் சோதனைத் திட்டத்தின் நோக்கமாகும்.

ஈட்டர் அணு உலையை உருவாக்க அடுத்த 10 ஆண்டுகளில் 500 கோடி யூரோ அளவிற்கு நிதி தேவைப்படும். அடுத்த 20 ஆண்டுகளில் அதனை சோதனை முறையில் நடத்துவதற்கு மேலும் 500 கோடி யூரோ நிதி தேவைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபிரான்ஸின் தென் பகுதியில் உள்ள காட்ராக்கி என்ற இடத்தில் இந்த சோதனை அணு உலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்