11 செ.மீ. மழை : மிதக்கிறது மும்பை!

Webdunia

சனி, 30 ஜூன் 2007 (18:19 IST)
மும்பையிலும், அதன் புறநகர்ப் பகுதிகளிலும் கடந்த 24 மணி நேரமாக தொடர்ந்து பெய்துவரும் மழையினால் பந்த்ரா, மாத்துங்கா, மத்திய மும்பை உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன!

மும்பை நகரத்தில் எங்கு நோக்கிலும் சாலைகளும், ரயில் பாதைகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. பந்த்ரா, மாத்துங்கா, மத்திய மும்பை ஆகிய பகுதிகளில் இதுவரை 10.8 செ.மீ. மழை பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை அடுத்த 24 மணி நேரத்திற்கு தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மும்பை சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய பல ரயில்கள் தாமதமாகப் புறப்பட்டுச் செல்கின்றன. மும்பையில் இருந்து புறப்பட வேண்டிய பல உள்நாட்டு, அயல்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மும்பைக்கு வரவேண்டிய விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடந்த 3 நாட்களாக மும்பை உட்பட மராட்டியத்தில் பெய்துவரும் மழையால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் கூறுகின்றன.

தொடர்ந்து பெய்துவரும் மழையால் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள மக்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மராட்டிய முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் கூறியுள்ளார்.

அமெரிக்க பயணத்தில் இருக்கும் விலாஸ்ராவ் தேஷ்முக், மும்பை மாநகராட்சி நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று உறுதியளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்