காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து கொண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் பைரோன் சிங் ஷெகாவத்தை வேட்பாளராக முன்மொழிந்து கையெழுத்திட்ட நட்வர் சிங்கை கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செய்யுமாறு காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது!
நட்வர் சிங்கின் நடவடிக்கை கட்சித் தாவல் சட்டத்திற்கு உட்பட்ட செயல் ஆதலால் மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்று கோரி, அவர் முன்மொழிந்த வேட்பாளரும், மாநிலங்களவைத் தலைவருமான பேரோன் சிங் ஷெகாவத்திடம் அம்மனுவை காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது.
பைரோன் சிங் ஷெகாவத் ராஜஸ்தானைச் சேர்ந்தவர் என்பதற்காக அவரை வேட்பாளராக தான் முன்மொழிந்ததாக விளக்கமளித்துள்ள நட்வர் சிங், மராட்டியத்தைச் சேர்ந்தவர் என்பதற்காகவே காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பிரதீபா பாட்டீலை ஆதரிப்பது என்று பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் உள்ள சிவ சேனா முடிவெடுத்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ.நா.வின் உணவிற்காக எண்ணெய் திட்டத்தின் கீழ் நடந்த ஊழலில் குற்றம் சாற்றப்பட்டதற்காக காங்கிரஸ் கட்சியில் இருந்து நட்வர் சிங் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. (யு.என்.ஐ.)