குடியரசுத் தலைவர் தேர்தல்: பிரதீபாவுக்கு சிவசேனை ஆதரவு

Webdunia

செவ்வாய், 26 ஜூன் 2007 (11:11 IST)
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பிரதீபா பாட்டீலை ஆதகரிக்கப் போவதாக பால் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சி அறிவித்துள்ளது.

சிவசேனை கட்சி நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சித் தலைவர் பால் தாக்கரே தலைமையில் மும்பையில் நேற்று ( திங்கள் கிழமை) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது.

அதில், நாடு சுதந்திரம் அடைந்தது முதல் மகாராஷ்டிரத்தை சேர்ந்த எவரும் உயர் பதவிக்கு வந்தது இல்லை என்றும், முதல் முறையாக அந்த வாய்ப்பு பிரதீபா பாட்டீலுக்கு வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அதை கட்சி கண்ணோட்டத்தில் கோட்டை விட சிவசேனை தயராக இல்லை என்றும் அதில் தெவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம் என்ற தனி மாநிலம் உருவாகிய பொன் விழா ஆண்டு நெருங்கி வருகையில் இப்படியொரு வாய்ப்பு கிடைப்பதை சிவசேனை இழக்க விரும்பவில்லை என்றும், பிரதீபா பாட்டீல் குறித்து ஊழல் புகார்களை கூறுவதை பா.ஜ.க. நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சிவசேனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் உள்ள சிவசேனை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பிரதீபா பாட்டீலை ஆதரிப்பதாக அறிவித்திருப்பது தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவுடன் போட்டியிடும் செகாவத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்