காற்றழுத்த தாழி கரையைக் கடந்தது!

Webdunia

வெள்ளி, 22 ஜூன் 2007 (17:28 IST)
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து நேற்று 400 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று இன்று காலை காகிநாடா அருகே கரையைக் கடந்தது!

இத்தகவலை அளித்துள்ள விசாகப்பட்டினம் புயல் எச்சரிக்கை மையம், கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறியுள்ளது. இதன் காரணமாக ஆந்திராவிலும், தமிழ்நாட்டின் வடக்கு கடலோர மாவட்டங்களிலும், புதுவையிலும் அடுத்த 36 மணி நேரத்திற்கு கனத்த, மிக கனத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விஜயநகரம், விசாகப்பட்டினம், கோதாவரி கிழக்கு, மேற்கு மாவட்டங்கள், கிருஷ்ணா, குண்டூர், பிரகாசம் மாவட்டங்களில் 25 செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்யும் என்றும், கடலோர ஆந்திரப் பகுதிகளில் அடுத்த 12 மணி நேரத்திற்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திற்கு காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதன் காரணமாக கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்றும், எனவே ஆந்திரா, வட தமிழ்நாடு, புதுவை மீனவர்கள் கடலிற்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டள்ளது.

இன்று காலையுடன் முடிவுற்ற 24 மணி நேரத்தில் ஓங்கோலில் 17 செ.மீ. மழையும், மசூலிப்பட்டினத்தில் 12 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

சென்னையிலும், அதன் புறநகர்ப் பகுதிகளிலும் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், அவ்வப்போது லேசாக மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்