வெற்றி நிச்சயமெனில் பரிசீலிக்கத் தயார் : 3-ம் அணியிடம் கலாம்!

Webdunia

புதன், 20 ஜூன் 2007 (18:30 IST)
குடியரசுத் தலைவர் தேர்தலில் அனைத்து கட்சிகளின் ஆதரவு கிடைத்து தான் வெற்றி பெறுவது நிச்சயமெனில் மீண்டும் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்கத் தயார் என்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியதாக சந்திரபாபு நாயுடு கூறினார்!

குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல் கலாமை தங்களது வேட்பாளராக அறிவித்த ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி எனும் 3-ம் அணியின் தலைவர்கள் இன்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை சந்தித்தனர்.

இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, அனைத்து கட்சிகளின் ஆதரவு நிச்சயமெனில் தான் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்கத் தயார் என்று தங்களிடம் அப்துல் கலாம் கூறியதாகத் தெரிவித்தார்.

நிச்சயமெனில் என்று கலாம் குறிப்பிட்டதற்கு என்ன பொருள் என்று செய்தியாளர்கள் வினவியதற்கு, "அதில் அனைத்தும் அடக்கம். அதனை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்" என்று சந்திரபாபு நாயுடு பதிலளித்தார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் அனைத்து கட்சிகளின் ஒருமித்த ஆதரவு இருந்தால் மீண்டும் போட்டியிடத் தயார் என்று சில நாட்களுக்கு முன்பு அப்துல் கலாம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அனைத்து கட்சிகளின் ஆதரவு கிடைத்து தனது வெற்றி உறுதி என்பது "நிச்சயமானால்" தான் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்கத் தயார் என்று கலாம் 3-ம் அணித் தலைவர்களிடம் கூறியுள்ளதாகவே தெரிகிறது.

சந்திரபாபு நாயுடுவுடன் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், அக்கட்சியின் பொதுச் செயலர் அமர் சிங், இந்திய தேசிய லோக்தள் தலைவர் ஓம்பிரகாஷ் சௌதாலா, ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலைச்சாமி, தம்பிதுரை, மைத்ரேயன், அசோம் கனபரிஷத்தின் தலைவர் பிருந்தாபன் கோஸ்வாமி ஆகியோரும் குடியரசுத் தலைவரை சந்தித்தனர். (பி.டி.ஐ.)

வெப்துனியாவைப் படிக்கவும்