குடியரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிட குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஒப்புக்கொண்டால் அவரை ஆதரிக்கத் தயார் என்று பாரதிய ஜனதா கட்சி திடீரென்று அறிவித்துள்ளது!
ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவர் ராஜ்நாத் சிங்கிடம், 3-ம் அணியின் வேட்பாளராக அப்துல் கலாம் அறிவிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு இவ்வாறு பதிலளித்தார்.
"கலாமை ஆதரிக்க நாங்கள் தயார். 2-ம் முறையாக குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட அவர் ஒப்புக்கொண்டால் அவரை ஆதரிப்பது குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கு நாங்கள் முயற்சிப்போம்" என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடும் குடியரசு துணைத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத்தை ஆதரிப்பது என்று நேற்றுதான் பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவெடுத்தது.
கலாமை ஆதரிக்க வேண்டும் என்று 3-ம் அணி விடுத்த வேண்டுகோளை பா.ஜ.க. பேச்சாளர் சுஷ்மா சுவராஜ் இன்று காலை மறுத்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், கலாம் ஒப்புக்கொண்டால் ஆதரிக்கத் தயார் என்று பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் கூறியிருப்பது அக்கட்சியின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள தலைகீழ் மாற்றத்தைக் குறிக்கிறது.