குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல் கலாமை அனைவரும் ஆதரித்தால், போட்டியில் இருந்து விலகத் தயார் என்று, தற்போதைய குடியரசுத் துணைத் தலைவர் செகாவத் அறிவித்திருக்கிறார்.
இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜுலை 19-ந்தேதி நடைபெற உள்ளது.
காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரதீபா பட்டீல் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். எதிர்கட்சியான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பிலும் இந்த தேர்தலில் வேட்பாளர் நிறுத்தப்படவில்லை. மாறாக, மாற்று அணியின் ஓட்டுகளையும் ஈர்ப்பதற்காக சுயேச்சையாக போட்டியிடும் குடியரசுத் துணைத் தலைவர் செகாவத்தை ஆதரிப்பது என்று நேற்று அறிவித்தது.
இந்த நிலையில், 8 கட்சிகளை கொண்ட 3வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், குடியரசுத் தலைவர் வேட்பாளராக மீண்டும் போட்டியிடும்படி தற்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை கேட்டுக்கொள்வது என்றும் அவரை அனைத்துக்கட்சிகளும் ஆதரிக்க முன்வர வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
அப்துல் கலாம் பெயர் புதிய கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டதும், காங்கிரஸ் கட்சி சார்பில் கலாமிற்கு ஆதரவு இல்லை என்று அறிவிக்கப்பட்டது. தங்களது முடிவில் மாற்றமில்லை என்றும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சதுர்வேதி திட்டவட்டமாக அறிவித்தார்.
இதையடுத்து குடியரசுத் தலைவர் வேட்பாளர்களில் ஒருவரான செகாவத் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிப்பதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டு, அனைவரும் ஆதரவு அளித்தால், தேர்தலில் இருந்து தான் மகிழ்ச்சியுடன் விலகிக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிட அப்துல் கலாம் ஒப்புக் கொண்டால் எனக்கு அதைவிட மகிழ்ச்சியானது வேறு எதுவும் இருக்க முடியாது. அதற்கு அனைத்து கட்சிகளின் ஆதரவு அவசியம் என்றும் செகாவத் குறிப்பிட்டிருந்தார்.