விமான ஊழியர்கள் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது!

Webdunia

வியாழன், 14 ஜூன் 2007 (15:42 IST)
மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 12,000 ஊழியர்கள் கடந்த 2 நாட்களாக நடத்தி வந்த வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது!

தங்களுக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அளிக்க வேண்டிய 10 ஆண்டுக்கால ஊதிய பாக்கியை முழுமையாக வழங்க `இந்தியன்' நிறுவனம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும், ஏர் இந்தியா நிறுவனம் ஊழியர்களுக்கு இணையான ஊதிய உயர்வையும், பணி உயர்வையும் அளிக்க வேண்டும் என்று கோரி நேற்று முன்தினம் இரவு முதல் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவை பெரும் பாதிப்பிற்கு உள்ளானது.

இந்த நிலையில் ஏர்லைன்ஸ் ஊழியர்களின் மிகப் பெரிய தொழிற்சங்கமான ஏ.சி.இ.யூ. நிர்வாகிகள் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்துடன் இன்று காலை முதல் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுடைய 10 ஆண்டுக்கால ஊதிய பாக்கியை 2008 ஆம் ஆண்டிற்குள் முழுமையாக அளித்திட இந்தியன் நிறுவனம் ஒப்புக்கொண்டதை அடுத்து வேலை நிறுத்தம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (யு.என்.ஐ.)

வெப்துனியாவைப் படிக்கவும்