குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், உத்திரப் பிரதேச முதல்வருமான மாயாவதியுடன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தியுள்ளார்.
வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று இந்தியா திரும்பினார். அவர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து, டெல்லி வந்துள்ள பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், உத்திரப் பிரதேச முதல்வருமான மாயாவதியுடன் இது குறித்து நேற்று இரவு ஆலோசனை நடத்தினார்.
சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்வதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும், பகுஜன் சமாஜ் கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு இல்லையென்றும், குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் விவகாரத்தில் தங்கள் கட்சியின் நிலையை நாளை அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே டெல்லியில் நடைபெற்ற ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங்கும் சோனியா காந்தியும் கலந்து கொண்டனர். அப்போது லாலுபிரசாத் யாதவ் உடன் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் குறித்து சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார்.