வானிலை மாற்றம் : பிரதமர் பேசுவார்!

Webdunia

புதன், 6 ஜூன் 2007 (14:10 IST)
கரியமில வாயு வெளியேற்றத்தால் புவியின் காற்று மண்டலம் வெப்பமடைந்து அதன் விளைவாக வானிலையில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் குறித்து ஜி-8 மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பேசுவார்!

ஜெர்மனியில் நடைபெறவுள்ள உலகின் முன்னேறிய நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஃபிரான்ஸ், ஜெர்மனி, கனடா, இத்தாலி, இங்கிலாந்து ஆகிய 8 நாடுகளின் கூட்டமைப்பான ஜி-8 ன் 33வது உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்கு டெல்லியில் இருந்து புறப்படுவதற்கு முன் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

"வானிலை மாற்றம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து நான் பேசுவேன். அடிப்படையான, பிரபஞ்ச ரீதியிலான பொதுவான கொள்கைகளை வலியுறுத்தும் அதே நேரத்தில், முன்னேறிய நாடுகளுக்கும், முன்னேறி வரும் நாடுகளுக்கும் உள்ள வேறுபட்ட பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும், சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் வானிலை மாற்றத்தில் முன்னேறிய நாடுகளின் பங்கு அதிகமானது என்பதையும் உணர்த்துவேன்" என்று பிரதமர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

வானிலை மாற்றம் போன்ற முக்கியமான பிரச்சனைகளை ஆராயும் போது முன்னேறிவரும் நாடுகளின் நலனையும், வளர்ச்சியையும் பாதிக்கக்கூடிய எவ்வித முடிவையும் முன்னேறிய நாடுகள் திணிக்கக்கூடாது என்பது நமது பார்வை என்பதை தான் தெளிவுபடுத்தவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

வானிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியன மட்டுமின்றி, எரிசக்தி பாதுகாப்பு, உலகளாவிய வர்த்தகத்தில் உள்ள இடர்பாடுகள், அந்நிய நேரடி முதலீடு, அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு ஆகியன குறித்து ஜி-8 நாடுகளின் தலைவர்களுடன் தான் விவாதிக்கப் போவதாக மன்மோகன் கூறியுள்ளார்.

ஜி-8 மாநாட்டிற்கு இடையே வரும் 8 ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை சந்தித்துப் பேசவுள்ள மன்மோகன் சிங் அப்பொழுது இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைக்கு கொண்டுவரும் 123 ஒப்பந்தம் தொடர்பான சிக்கல்கள் குறித்தும் விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (ஏ.என்.ஐ.)

வெப்துனியாவைப் படிக்கவும்