உணவுப் பாதுகாப்புத் திட்டம் : பிரதமர் வலியுறுத்தல்

சந்தையில் போதுமான அளவிற்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவும், விலைவாசியை கட்டுப்படுத்தவும் உணவுப் பாதுகாப்புத் திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்!

தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் 53வது தேச மேம்பாட்டுப் பேரவைக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், கோதுமை, அரிசி, பருப்பு வகைகள், உணவு எண்ணெய்கள் போன்ற அத்தியாவசியமான உணவுப் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும், அதனை உறுதி செய்ய உணவுப் பாதுகாப்புத் திட்டம் அவசியம் என்றும் கூறினார்.

விவசாயிகளின் நலன் காக்க அவர்களுக்கு உறுதியான பலன் கிடைக்கக்கூடிய வேளாண் திட்டத்தை உருவாக்குமாறு கேட்டுக் கொண்ட பிரதமர், உள்ளூர் விவசாயத் திட்டங்களுக்கு மாநில அரசுகள் உதவுவதற்கு ஏதுவாக மத்திய அரசின் நிதி ஆதாரத்தை பயன்படுத்துவதற்கான பெரும் திட்டங்களை திட்ட ஆணையத்தின் வாயிலாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

"சிறிய, சாதாரண அளவில் விவசாயம் செய்வது பயனளிக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அதனை மாற்ற வேண்டும். அதைச் செய்யாவிட்டால் வறுமையையும், சாதாரண மக்கள் சந்தித்து வரும் நெருக்கடிகளையும் குறைப்பதென்பது இயலாததாகிவிடும்" என்று மன்மோகன் சிங் எச்சரித்தார்.

விவசாயம் என்பது மாநில அரசிற்கு உட்பட்ட தொழிலாளததால், திட்டமிடுதலும், அதனை நடைமுறைப்படுத்துவதும் மாநில அளவிலேயே சிறப்பாக செய்து முடிக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் பொருந்தக்கூடிய தனித்தனியான வேளாண் திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும். அதன்மூலம் விவசாயத் துறையை உயிரூட்டமுடையதாக மாற்ற முடியும். அதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வளங்களை ஒன்றிணைக்கக் கூடிய விவசாயத் திட்டங்களை வகுக்க வேண்டும். பிற்பட்ட பகுதிகள் மேம்பாட்டு நிதி, தேச, ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டங்களை விவசாயத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளாக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

எப்படிப்பட்ட திட்டத்தை நிறைவேற்றினாலும், அத்திட்டம் குறைந்தகால, இடைக்கால, நீண்ட கால பலன்களை விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும், ஊரகப் பொருளாதாரத்திற்கும் அளிப்பதாக இருக்க வேண்டும். விவசாயத் துறையில் அதனை பாதிக்கக் கூடிய எந்தச் சிக்கலும் ஏற்படாதவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். அப்பொழுதுதான் இந்தியாவைப் போன்ற வளர்ந்துவரும் பொருளாதாரத்தின் தேவைகள் நிவர்த்தியாகும் என்று பிரதமர் கூறினார்.

தமிழக முதலமைச்சர் கருணாநிதி உள்ளிட்ட மாநில முதலமைச்சர்கள் அனைவரும் கலந்துகொள்ளும் இக்கூட்டத்தில் திட்ட ஆணையத்தின் துணைத் தலைவர் மோன்டெக் சிங் அலுவாலியாவும், வேளாண் அமைச்சர் சரத் பவாரும் உரையாற்றினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்