மின் உற்பத்தி: பிரதமர் எச்சரிக்கை

நமது நாட்டின் வளர்ந்து வரும் தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தி அதிகரிக்காவிட்டால் அது நமது பொருளாதார விஷயத்தை வெகுவாக பாதித்துவிடும் என்று பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் எரிசக்தி துறை குறித்து இன்று நடந்த முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மன்மோகன் சிங், நமது பொருளாதார வளர்ச்சியை 9 முதல் 10 விழுக்காடு அளவிற்கு உறுதிபடுத்த வேண்டுமாயின் அதற்கு மின் உற்பத்தி அதிகரிக்கப்படுவது அவசியம் என்றும் அதற்கான முயற்சிகளில் மத்திய எரிசக்தித் துறையும், மாநில அரசுகளும் தீவிரம் காட்ட வேண்டும் என்றும் கூறினார்.

" எரிசக்தி உற்பத்தி பிரகாசமாக இல்லை. இன்னும் சொல்லப்போனால் எரிசக்தி உற்பத்திக்கான ஆதாரங்கள் தீர்ந்து வருகின்றன. நமது தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே உள்ள இடைவெளியை போக்க விட்டால் , அது நமது பொருளாதாரத்தை அழித்து விடும்" என்று மன்மோகன் சிங் கூறினார்.

மின் உற்பத்தி செய்யப்படும் இடத்தில் இருந்து பயன்பாட்டிற்கு கொண்டு செல்லப்படும் இடைப்பட்ட தூரத்தில் ஏற்படும் இழப்பு மிக அதிகம் என்றும் அது ஒரு சில மாநிலங்களில் 30 முதல் 45 விழுக்காடு வரை உள்ளது என கூறிய பிரதமர், இதனை முறைப்படுத்துவது மட்டுமின்றி, மின் திருட்டையும் தடுக்க வேண்டும் என்றும், இவ்விரு பிரச்சனைகளும் எரிசக்தி துறையின் நிதி நிலையை நிலைகுலை செய்யும் என்றும் அவர் எச்சரித்தார். (U N I)

வெப்துனியாவைப் படிக்கவும்