போபால் விஷவாயு: அமெரிக்க நிறுவனம் உளவு பார்த்தது?-விக்கிலீக்ஸ் புதிய தகவல்
செவ்வாய், 28 பிப்ரவரி 2012 (05:43 IST)
FILE
இந்தியாவில் கடந்த 1984-ம் ஆண்டில் நடைபெற்ற போபால் விஷ வாயு விபத்தின் துயரம் தொடர்பாக நடைபெற்ற போராட்டங்கள், அது தொடர்பான வழக்குகள் மற்றும் போராட்டக்காரர்களின் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தனியார் துப்பறியும் நிறுவனமான ஸ்டிராட்பார் உளவு பார்த்ததாக, விக்கி லீக்ஸ் இணைய தளம் தகவல் வெளியிட்டு உள்ளது.
தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த விக்கி லீக்ஸ் நிறுவனம் மீண்டும் செயல்படத் தொடங்கியபின் வெளியிடப்பட்டுள்ள இந்த தகவல்களில், டவ் கெமிக்கல் நிறுவனத்துக்காக உளவு பார்த்ததாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதற்கு ஆதாரமாக, கடந்த 2004 முதல் 2011-ம் ஆண்டு வரையிலான இ மெயில்கள் பரிமாற்ற தகவல்களும் இடம் பெற்றுள்ளன.
ஆனால், ஸ்டிராட்பார் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜார்ஜ் பிரீட்மென் இந்த குற்றச்சாட்டை மறுத்து இருப்பதுடன், தங்கள் நிறுவனம் இலவச சேவைகளையே வழங்கி வருவதாக குறிப்பிட்டு இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இணைய தள செய்திக்குறிப்பில், இதுபோன்ற தவறான தகவல்களை தொடர்ந்து பரப்பி வரும் சில தனியார் அமைப்புகளுக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.