பிரான்ஸ் நாட்டின் தென் பகுதியில் அணு உலைக் கூடத்தில், பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருளை உருக்கும் உலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டார், மூவர் காயமுற்றனர் என்று அந்நாட்டு அணு பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.
செண்ட்ராகோ எனுமிடத்திலுள்ள அணு உலைக் கூடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இங்குள்ள அணுக் கூடத்தில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளில் கலந்துள்ள உலோக கழிவுகளை உருக்கும்போது அது வெடித்ததாக பிரான்ஸ் அணு பாதுகாப்பு முகமை கூறியுள்ளது.
வெடி விபத்தால் ஏற்பட்ட தீ அவிக்கப்பட்டுவிட்டாகவும், எதனால் இந்த வெடிப்பு நிகழ்ந்தது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
உலகிலேயே பிரான்ஸ் நாடுதான் அணு மின் சக்தியை மிக அதிக அளவிற்கு பயன்படுத்தி வருகிறது. அந்நாட்டின் மொத்த மின் தேவையில் 75 விழுக்காடு அணு மின் உலைகளில் இருந்தே பெறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.