அல் காய்தாவைவிட இந்தியாதான் பெரிய அச்சுறுத்தல்: பாகிஸ்தான் மக்கள்

புதன், 22 ஜூன் 2011 (13:38 IST)
தாலிபான் மற்றும் அல் காய்தா பயங்கரவாத அமைப்புகளைவிட இந்தியாவைத்தான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக பெரும்பான்மையான பாகிஸ்தானியர்கள் கருதுவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"பியு ரிசர்ச் சென்டர்" என்ற அமைப்பு இது தொடர்பாக நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

இந்தியா, அல் காய்தா, தாலிபான் ஆகியவற்றில் எது பாகிஸ்தானுக்கு பெரும் அச்சுறுத்தல் எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு 57 விழுக்காட்டினர் இந்தியாதான் என பதிலளித்துள்ளனர்.

இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவது முக்கியம் என்று 10-ல் 7 பேர் கருதுகின்றனர். இந்தியாவுடனான வர்த்தகம் அதிகரிப்பது நல்ல விடயமாக இருக்கும் என்று பலரும் நம்புகின்றனர்.

2 நாடுகளிடையே பதற்றத்தைக் குறைக்க மேலும் பேச்சுவார்த்தை நடத்த பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அல் காய்தா தலைவர் பின்லேடனை சமீப காலமாக யாரும் விரும்பவில்லை என்றாலும் அவரது மரணம் மோசமான ஒன்று என பாகிஸ்தானியர்கள் தெரிவித்துள்ளனர். 14 விழுக்காட்டினர் மட்டுமே அவரது மரணம் நல்ல விடயம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

பின்லேடனின் மறைவிடத்தின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை பெரும்பாலான பாகிஸ்தானியர்கள் நம்புகிறார்கள்.இந்த தாக்குதலினால் அமெரிக்காவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவில் மேலும் விரிசல்கள் வரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மும்பை தாக்குதலுக்கு பொறுப்பேற்ற பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கு பாகிஸ்தானியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.சுமார் 27 விழுக்காட்டினர் அந்த அமைப்பை ஆதரிப்பதாக அந்த ஆய்வில் மேலும் தெரியவந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்