பிரபாகரனின் குடும்பத்தினர் உயிருடன் உள்ளதாக கூறுகிறது இலங்கை அரசு

புதன், 22 ஜூன் 2011 (13:17 IST)
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தினர் உயிருடன் உள்ளதாக இலங்கை நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி மற்றும் பிள்ளைகள் உயிருடன் இருப்பதாக இலங்கை நாடாளுமன்றத்தின் நேற்றைய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் மனித உரிமைகள் மீறப்படுவதாக ஐ.நா அறிக்கை வெளியிட்டதும், அந்நிலையை மாற்றியமைப்பதற்காக இஸ்ரேல் செயற்பட்டது என்றும், எனவே இலங்கையும் அவ்வாறு செயற்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார்.

இந்த விவாதத்துக்குப் பதிலளித்த அதிபர் ராஜபக்சவின் முன்னாள் ஆலோசகரும், ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரமான ஏ.எச்.எம்.அஸ்வர், அல் காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனுடன், அவரது குடும்பத்தினரையும் அமெரிக்கா கொன்றது போல அல்லாமல், புலிகளின் தலைவரின் குடும்பத்தை ராஜபகச இப்போதும் பேணிப் பாதுகாப்பது அவரின் மனிதாபிமானத் தன்மையை வெளிக்காட்டுவதாகவும், அவர்களை அரசாங்கம் நல்ல முறையில் பேணி வருவதாகவும் கூறினார்.

இறுதி யுத்தத்தின் போது நந்திக் கடலில் நடைபெற்ற மோதலின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்ட போதும், அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் கொல்லப்படவில்லை என்று அவர் கூறினார்.

ஆனால் தற்போது பிரபாகரனின் மனைவி மற்றும் பிள்ளைகள் எங்கு உள்ளார்கள், அந்தத் தகவல் அவருக்கு எவ்வாறு கிடைத்தது என்பன போன்ற விபரங்களை அஸ்வர் தெரிவிக்கவில்லை.

சேனல் 4 தொலைக்காட்சி அண்மையில் ஒளிபரப்பிய இலங்கை இராணுவத்தினரின் போர்க் குற்றத்தை நிரூபிக்கும் " இலங்கை கொலைக்களம்" வீடியோவினால் உலக நாடுகளிடையே கடும் அவப்பெயரை சந்தித்துள்ள இலங்கை அரசு, தற்போது பிரபாகரன் குடும்பத்தினர் உயிருடன் உள்ளதாகவும், அவர்களை பேணி பாதுகாத்து வருவதாகவும் கூறுவது ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்