இலங்கையில் லஷ்கர் இ தொய்பா முகாம்: விக்கிலீக்ஸ் அம்பலம்

திங்கள், 6 டிசம்பர் 2010 (18:20 IST)
இலங்கையில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதக் குழுவினரின் பயிற்சி முகாம்கள் பற்றிய ரகசியங்கள் உட்பட மற்றும் இன்னும் முக்கியமான ரகசியங்களை உள்ளடக்கிய அமெரிக்க தூதரக அதிகாரியின் அறிக்கையொன்றை விக்கிலீக்ஸ் இணையத்தளம் அம்பலப்படுத்தியுள்ளது.

அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சகத்தின் அறிக்கையின் படி இலங்கையில் பயிற்சி முகாமொன்றை நிறுவிக்கொண்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள், இந்தியாவின் கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் தங்களது நடவடிக்கை முகாம்களை அமைப்பதற்குத் திட்டமிட்டிருந்ததாக தெரிய வருகின்றது.

இந்தியா, பாக்கிஸ்தான், நேபாளம், இலங்கை போன்ற நாடுகளில் லஷ்கர் இ தொய்பாபாவின் வளர்ச்சி அச்சுறுத்தும் வகையில் அமைந்திருந்ததாகவும் அந்த அறிக்கை மேலும் குறிப்பிடுகின்றது.

அந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவரான ஷபீக் கபா என்பவர், இந்தியாவில் இரண்டு இடங்களில் தமது நடவடிக்கை முகாம்களை அமைத்துக் கொள்வதில் தீவிர கவனம் செலுத்தியதாகவும் அந்த அறிக்கை மேலும் குறிப்பிடுகின்றது.

இலங்கையிலிருந்து வெளியேறிய போத்தல ஜயந்த, அஷ்ரப் அலீ போன்ற பல ஊடகவியலாளர்களும் மற்றும் எதிர்க்கட்சியினர் பலரும் இந்த விடயம் பற்றித் தெரிவித்த கருத்துக்களை பொய் என்று மறுத்த இலங்கை அரசாங்கம், அதன் குற்றங்கள் தொடர்பான ஆதாரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்து புயலைக் கிளப்பிக் கொண்டிருப்பது கண்டு தற்போது கையைப் பிசைந்து கொண்டிருக்கின்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்