"விக்கிலீக்ஸ்" இணைய தளத் தலைவர் உயிருக்கு ஆபத்து: தாயார் அச்சம்
வியாழன், 2 டிசம்பர் 2010 (17:31 IST)
அமெரிக்க தூதரக மற்றும் பாதுகாப்புத் துறை ரகசியங்களை வெளியிட்ட "விக்கிலீக்ஸ்" இணைய தள தலைவர் ஜூலியன் அசாஞ்சேவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவரது தாயார் கிறிஸ்டியன் அசாஞ்சே அச்சம் தெரிவித்துள்ளார்.
தமது மகன் உண்மையை வெளிக்கொணர முயலும் ஒரு வலிமையான மற்றும் அதி புத்தி சாதுரியம் உள்ளவர் என்றும், உலக நன்மைக்காகவே அவர் இதனை செய்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இராணுவ ரகசியங்களை வெளியிடும் "விக்கிலீக்ஸ்" இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே மீது அமெரிக்கா, உளவு பார்த்த குற்றத்துக்காக வழக்குப் பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
மேலும் ஜூலியன் அசாஞ்சே, கடந்த ஆகஸ்டு மாதம் மத்திய ஸ்வீடனிலுள்ள என்கோபிங் என்னுமிடத்தில் ஒரு மாநாடு ஒன்றை நடத்தியபோது அதில் கலந்து கொண்ட ஒரு பெண்மணியையும் மற்றும் ஸ்டாக்ஹோமில் வேரொரு பெண்ணையும் கற்பழித்ததாக புகாரின் அடிப்படையில், இண்டர்போல் காவல் படையினரும் அவரை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.