இந்திய அரசின் கணினிகளை 'ஹேக்' செய்ய சீனா முயற்சி

திங்கள், 18 ஜனவரி 2010 (19:38 IST)
இந்திய அரசின் கணினிகளை 'ஹேக்' செய்ய சீனா முயற்சித்ததாக இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் குற்றம் சாற்றியுள்ளார்.

கடந்த டிசம்பர் 15 ஆம் தேதியன்று டெல்லியிலுள்ள தமது அலுவலக கணினிகள் மட்டுமல்லாது, இதர இந்திய அரசு துறை அலுவலக கணினிகளிலும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக லண்டனிலிருந்து வெளியாகும் 'தி டைம்ஸ்' பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் நாராயணன் இதனை தெரிவித்துள்ளார்.

பிடிஎப் இணைப்புடன் கூடிய ஒரு இ மெயில் தமது அலுவலகத்திற்கு வந்ததாகவும், அதில் வைரஸ் இடம் பெற்றிருப்பதை அறிந்த கணினி நிபுணர்கள், அந்த வைரஸை அழிக்கும் வரை அந்த மெயிலை திறக்க வேண்டாம் என எச்சரித்ததால் 'ஹேக்' முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் அவர் அதில் கூறியுள்ளார்.

இதே தினத்தில்தான் அமெரிக்கா பாதுகாப்புத் துறை, நிதித் துறை மற்றும் கூகுள் உள்ளிட்ட தொழில் நுட்ப நிறுவனங்கள் சீனாவிலிருந்து 'சைபர்' தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறியிருந்தனர்.

எனவே இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட 'ஹேக்' முயற்சியும் சீனாவிலிருந்தே வந்திருக்க வேண்டும் என்றும் தாம் கருதுவதாகவும் நாராயணன் அந்த பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்