'இயற்கை பேரழிவு : இந்தியா, சீனாவுக்கு அதிக ஆபத்து'
திங்கள், 15 ஜூன் 2009 (19:11 IST)
ஜெனீவா : நிலநடுக்கம், வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவால் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான அதிக அச்சுறுத்தல் கொண்ட நாடுகளாக இந்தியா மற்றும் சீனா திகழ்வதாக ஐ.நா. அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, சீனா தவிர பங்காளதேஷ், கொலம்பியா, இந்தோனேஷியா மற்றும் மியான்மர் போன்ற நாடுகளும் இதே அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
நிலநடுக்கம்,சூறாவளி, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ப்ன்றவை இயற்கை பேரிடர்கள் ; நம்மால் அதனை தடுக்க இயலாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. வின் " இறப்புக்கான அதிக அச்சுறுத்தல் அட்டவணை " அறிக்கையை சமர்ப்பித்த பிலிப்பன்ஸ்சை சேர்ந்த லாரன் லாகர்தா, இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதே சமயம் வளரும் நாடுகள் இயற்கை பேரழிவுகளிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான திட்டங்களை தயாரிப்பதில், இன்னும் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அதில் அவர் கூறியுள்ளார்.
மேலும் இதற்கு பணக்கார நாடுகள் உதவ வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள லாரன், பணக்கார நாடுகளின் தொழில்மயமாக்கல் காரணமாக ஏற்பட்ட சீதோஷ்ண நிலை மாற்றத்தின் தாக்கமே இயற்கை சீற்றத்தை ஏற்படுத்துவதாகவும் அதில் கூறியுள்ளார்.