கடலில் விழுந்த ஏர்-பிரான்ஸ் விமானம் கண்டுபிடிப்பு

ஞாயிறு, 7 ஜூன் 2009 (15:57 IST)
அட்லாண்டிக் கடலில் ஒரு வாரத்திற்கு முன்பு விழுந்த ஏர்-பிரான்ஸ் விமானத்தின் உதிரிபாகங்கள் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பயணம் செய்த 2 பயணிகளின் உடலும் மீட்கப்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நோக்கி 228 பேருடன் கடந்த 1ஆம் தேதி புறப்பட்டுச் சென்ற ஏர்-பிரான்ஸ் விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்து மூழ்கியது. விபத்து நடந்த இடத்தில் பிரான்ஸ் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளின் போர் விமானங்களும், கப்பல்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தன. நீர் மூழ்கி கப்பல்களும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

சில தினங்களுக்கு முன் விமானம் மாயமான இடத்தில் இருக்கை போன்ற ஒருபொருள் மிதந்து கொண்டிருந்ததைக் கண்டு, விமானம் கிடைத்து விட்டதாக கூறப்பட்டது. ஆனால் அது விமானத்தின் இருக்கை பகுதி அல்ல என்று பின்னர் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தேடுதல் பணி முடுக்கிவிடப்பட்டது.

இந்நிலையில், விபத்து நடந்த கடல் பகுதியில் 6 நாட்களுக்கு பிறகு பிரேசில் நேரப்படி நேற்று காலை பெர்னாண்டோ டி நொரங்கா தீவில் இருந்து வடகிழக்கே சுமார் 900 கி.மீ. இரண்டு உடல்கள் மற்றும் ஒரு சூட்கேஸ், ஒரு பை, விமான இருக்கை ஆகியவை மிதப்பதை பிரேசில் மீட்புக்குழுவினர் கண்டு பிடித்ததாக பிரேசில் விமானப்படை உயர் அதிகாரி ஜார்ஜ் அமரால் தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட 2 உடல்களும் ஆண்களுடையது என்றும், மீட்கப்பட்ட சூட்கேசில் விமான டிக்கெட் மற்றும் ஒரு லேப்-டாப் கணினி இருந்ததாகவும் அவர் கூறினார். முதலில் ஒரு உடலை கடற்படை கப்பலில் இருந்தவர்கள் கண்டுபிடித்து மீட்டதாகவும், அதன் பிறகு 20 நிமிடம் கழித்து மற்றொரு உடல் மீட்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்