மக்களைக் காக்க வேண்டுமானால் சரணடையுங்கள்: புலிகளுக்கு ராஜபக்ச மிரட்டல்!
திங்கள், 6 ஏப்ரல் 2009 (17:44 IST)
webdunia photo
FILE
வன்னியில் பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களைக் காக்க நினைத்தால் சரணடையுங்கள், இல்லையேல் முழுமையான தோல்வியை எதிர்கொள்ளுங்கள் என்று விடுதலைப் புலிகளுக்கு சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச மிரட்டல் விடுத்துள்ளார்.
முல்லைத் தீவுப் பகுதியில் கடந்த 4 நாட்களாக நடந்த கடுமையான போரில் 480 விடுதலைப் புலிகளை கொன்று, புதுக்குடியிருப்பு நகரை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக சிறிலங்க இராணுவம் அறிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் விஞ்சியிருப்பவர்கள் வன்னிப் பகுதியில் உள்ள பாதுகாப்பு வலயத்திற்குள் கூடாரமடித்து வாழ்ந்துவரும் மக்களுடன் கலந்துள்ளனர் என்றும், எனவே அப்பகுதியில் உள்ள மக்களை மீட்க (!) இறுதித் தாக்குதல் நடத்த தயாராகி வருவதாகவும் சிறிலங்க இராணுவம் தெரிவித்துள்ளது.
அப்பாவி மக்கள் அடைக்கலமாகியுள்ள பாதுகாப்பு வலயத்தின் மீது ஒரு பெரும் தாக்குதல் நடத்த சிறிலங்க இராணுவத்தின் பல பிரிவுகள் தயாராகி வரும் நிலையில், விடுதலைப் புலிகள் சரணடைய வேண்டும் அல்லது முழுமையான தோல்வியை சந்திக்கத் தயாராக வேண்டும் என்று அதிபர் ராஜபக்ச கூறியுள்ளார்.
“விடுதலைப் புலிகள் சரணடைந்து, அவர்களை சூழ்ந்துள்ள முழுமையான தோல்வியை (அழிவை) தவிர்த்துக் கொள்ளலாம்” என்று கூறியது மட்டுமின்றி, “தங்களுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு ஆயுதங்களை கீழே போட்டிவிட்டு அவர்கள் சரணடைய வேண்டும், அதன் மூலம் அங்கு சிக்கியுள்ள மக்களையும் அவர்கள் காப்பாற்றிக் கொள்ளலாம்” என்று கூறியுள்ளார்.
அதிபர் ராஜபக்ச இவ்வாறு கூறியதன் மூலம், 20 கி.மீ. நீளமுள்ள பாதுகாப்பு வலயத்தின் மீது ஒரு பெரும் இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
இந்த பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் மட்டும் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கூடாரங்களில் உணவு, மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதுமின்றி வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் மீது தொடர்ந்து எறிகணைத் தாக்குதல் நடத்தியும், விமானங்கள் மூலம் குண்டுகள் வீசியும் ஒவ்வொரு நாளும் 50 முதல் 100 பேர் வரை தொடர்ந்து கொன்று குவித்து வந்த சிறிலங்கப் படைகள், தற்பொழுது மிகப் பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகளை முழுமையாக ஒழிக்கக் கூடிய இறுதிப் போர் என்று இப்படிப்பட்ட தாக்குதலிற்கு நீண்ட காலமாகவே சிறிலங்க அரசு திட்டமிட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர்த் தாக்குதலால் புதுக்குடியிருப்பை கைப்பற்ற இயலாததால் அது தாமதப்படுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிறிலங்க அதிபரின் இன்றைய மிரட்டல் அப்படிப்பட்ட பேரழிவை நடத்த வெளிப்படையாக அனுமதி வழங்கப்பட்டு விட்டது என்பதையே காட்டுகிறது.