சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்த போர் நிறுத்தத்தை ‘மதித்து’ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து 26 தமிழர்கள் சிறிலங்க அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ளனர்.
முல்லைத் தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள அப்பாவித் தமிழர்கள் அங்கிருந்து வெளியேறி அரசு கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வர 48 மணி நேர போர் நிறுதத்தை அறிவித்தார் சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச. இதைப் பயன்படுத்திக் கொண்டு முல்லைத் தீவுப் பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியேறி வருமாறு சிறிலங்க அரசு அழைப்பு விடுத்தது.
ஆனால், நேற்றுவரை ஒருவர் கூட விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து சிறிலங்க இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரவில்லை. அதே நேரத்தில் பாதுகாப்பு பகுதி என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளின் மீது சிறிலங்க இராணுவம் நடத்திய பீரங்கித் தாக்குதலில் நேற்று மட்டும் 28 பேர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர் என்று விடுதலைப் புலிகள் இயக்கம் தெரிவித்திருந்தது.
இன்றும், பாதுகாப்புப் பகுதி என்று அறிவிக்கப்பட்ட சுதந்திரபுரம் எனும் இடத்தின் மீது சிறிலங்க இராணுவம் நடத்திய பல்குழல் பீரங்கித் தாக்குதலில் இரண்டு தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் 12 பேர் காயமுற்றதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று இரவுடன் போர் நிறுத்தம் முடிவுறும் நிலையில், இன்று புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஓமந்தை பகுதியில் இருந்து 26 பேர் வெளியேறி சிறிலங்க இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு சென்றுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இச்செய்தி தமிழ்நெட் இணையத்தளத்தில் வந்துள்ளது.
ஆனால், ஓமந்தைப் பகுதியில் இருந்து 35 குடும்பங்களைச் சேர்ந்த 67 பேரும், விஸ்வமடு, முல்லைத் தீவு பகுதிகளில் இருந்து பாலமோடை எனும் இடத்திற்கு படகின் மூலம் 106 பேரும் வந்துள்ளதாக சிறிலங்க இராணுவம் தெரிவித்துள்ளது.
ஆக, அதிபர் ராஜபக்ச அறிவித்த போர் நிறுத்தத்தை பயன்படுத்திக் கொண்டு சிறிலங்க அரசை நம்பி 173 தமிழர்கள் வந்துள்ளனர்.