ஆஸ்கர் விருதுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் பரிந்துரை

வெள்ளி, 23 ஜனவரி 2009 (10:56 IST)
சர்வதேச அளவில் திரைப்படத் துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அவர் இசையமைத்த ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ என்ற படம், ஏற்கெனவே ‘கோல்டன் குளோப்’ விருது அண்மையில் பெற்றது. இதையடுத்து அந்த விருதைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றார்.

இந்நிலையில் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தின் பின்னணி இசை அமைப்புக்கும், 2 பாடல்களுக்காகவும் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி சிறந்த படத்துக்கான விருதுக்கும், சிறந்த இயக்குநருக்கான விருதுக்கும் ‘ஸ்லம்டாக் மில்லியனர’ படத்தின் இயக்குநர் டானி பாய்ல் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் இடம்பெறும் ‘ஜெய் ஹோ’ பாடலை எழுதிய குல்சார் பெயரும், ‘ஓ சாய’ பாடலை எழுதிய மாயா அருள்பிரகாசம் ஆகிய இருவரது பெயரும் சிறந்த பாடலசிரியருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

அப்படத்தின் சிறந்த திரைக்கதை அமைப்புக்காக சைமன் பியூஃபாய் பெயரும் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கர் விருதுக்குப் தனது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்