விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் வீறு கொண்டெழும். எங்கள் போராட்டத்தை இந்தியாவும் ஆதரிக்கும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறியுள்ளார்.
‘லக்பிம நியூஸ்’ என்ற சிங்களப் பத்திரிகைக்கு மின்னஞ்சல் மூலம் பிரபாகரன் அளித்துள்ள சிறப்புப் பேட்டியின் சில பகுதிகள்...
கிளிநொச்சியை ராணுவம் பிடித்துவிட்டதாகவும், புலிகளுக்கு முடிவு நெருங்கி விட்டதாகவும் கூறப்படுவது குறித்து…
எமது நெடிய போராட்ட வரலாற்றில் இதைவிட பெரிய நெருக்கடிகளைச் சந்தித்திருக்கிறோம். சிங்கள அரசின் ஒருதலைப்பட்சமான பிரச்சாரங்களையும் பார்த்திருக்கிறோம். அவற்றை வெற்றிகரமாக முறியடித்துமிருக்கிறோம்.
யாழ்ப்பாணத்திலிருந்து நாங்கள் வன்னிப் பரப்புக்கு இடம்பெயர்ந்தபோது மீண்டும் எம்மால் முழுமையான இராணுவ அமைப்பாக செயல்படவே முடியாது என்று அரசுப் படைகள் பிரச்சாரம் செய்தன. ஆனால் அதற்குப் பிறகுதான் முல்லைத் தீவை மீண்டும் கைப்பற்றினோம். ஓயாத அலைகள் 1, 2 மற்றும் 3-ஐ வெற்றிகரமாக நடத்தி ஆனையிறவு மற்றும் வன்னியின் பெரும் நிலப்பரப்புகளை மீட்டோம்.
இப்போதும் கிளிநொச்சியை நாங்கள் விரைவில் இழந்து விடுவோம் என்று சிங்கள அரசு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது. ஆனால் சமீபத்தில் அரசுப் படைகளுக்கு புலிகள் ஏற்படுத்தியுள்ள பலத்த சேதமே சொல்லும் எமது இயக்கத்தின் எதிர்கால வெற்றிகள் எப்படிப்பட்டவை என்று.
தமிழகம் முழுமையாக ஆதரிக்கிறது!
தங்கள் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்ற விடுதலைப் புலிகள் ஓழிக்கப்பட்டால் சந்தோசமே, எனும் எண்ணத்தில் ஈழத் தமிழர்களுக்கு உதவ மறுக்கிறது இந்தியா. தமிழக முதல்வர் கருணாநிதியும் கடைசியில் இந்திய அரசின் நிர்ப்பந்தத்துக்குப் பணிந்து தனது ஈழ ஆதரவுப் பிரச்சாரத்தை நிறுத்திக் கொண்டுள்ளார். இந்தியாவின் முழுமையான ஆதரவை நீங்கள் இழந்துவிட்டதைத்தானே இது காட்டுகிறது?
இதை நாம் முற்றாக மறுக்கிறோம். தமிழக மக்களும் அரசியல் தலைவர்களும் வேறுபாடுகளைக் கடந்து ஒருமனதுடன் எம்மையும் எமது போராட்டத்தையும் ஆதரிக்கிறார்கள். இவர்களில் எந்தத் தலைவரும் எமக்கான ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கவில்லை. இன்னமும் பல வடிவங்களில் ஆதரவினை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இந்திய அரசுடன் எங்களது உறவை மேம்படுத்திக் கொள்வதற்கான, ராஜாங்க ரீதியான வழிமுறைகளில் இறங்கியுள்ளோம். இந்தச் சூழலில் இந்தியாவின் மத்திய அரசும் எங்களது போராட்டத்தை ஆதரிக்கும் என்ற நிலை உருவாகி வருகிறது. இது பலருக்குத் தெரியாது. தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு இது நன்கு தெரியும் என்று நம்புகிறேன்.
கிழக்குப் பகுதியை விடுவிக்க இலங்கை ராணுவம் முயற்சி எடுத்த போது வாயைத் திறக்காத கருணாநிதியும் மற்ற தலைவர்களும், திடீரென்று கிளிநொச்சி மக்களைப் பற்றி பேசி வருவது ஏன்? சரிந்து கிடக்கும் தங்கள் அரசியல் இமேஜைத் தூக்கி நிறுத்தி ஆதாயம் தேடும் முயற்சிதானே… இந்தக் கோணத்தில் நீங்கள் பார்க்கவில்லையா?
தமிழகத்தின் அனைத்து தலைவர்களும் எமது விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கிறார்கள், மனமார. காரணம் எமது மக்கள் மீது அவர்களுக்குள்ள உண்மையான அன்பு. எந்த உள்நோக்கமும் இல்லாமல்தான் அவர்கள் எம்மை ஆதரிப்பதாகவே நான் கருதுகிறேன்.
மண்ணை விட்டு ஓடிவிட மாட்டேன்!
நீங்கள் தஞ்சமடைய பல்வேறு நாடுகளிடம் உதவி கேட்டு வருவதாகவும், எரித்தீரியா அல்லது தென் ஆப்ரிக்காவுக்கு தப்பிச் செல்லக் கூடும் என்றும் வதந்தி உலா வருகிறது. உங்கள் சகாக்களை விட்டுச் சென்று விடுவீர்களா?
இது அப்பட்டமான பொய். சிங்கள அரசின் ஊடகங்கள் செய்யும் திட்டமிட்ட பிரச்சாரம். எமது மண்ணைவிட்டு ஓடுபவர்கள் அல்ல நாங்கள். எமது மக்களின் உரிமைகளை மீட்க இறுதி வரைப் போராடுவோம்.
இன்னும் எவ்வளவு விடுதலைப் புலிகள் உங்கள் படையில் உள்ளனர்?
பல பல ஆயிரங்கள்…
உங்களுக்கு வயதாகிக்கொண்ட வருகிறது.தமிழ் ஈழம் அவ்வளவு சுலபத்தில் கிடைப்பதாகவும் தெரியவில்லை. இதுபற்றி..
எங்களுடையது சுதந்திரப் போர். இது ஒரு தேசிய இயக்கம். அதற்கு கால வரையறை கிடையாது என்பது எமக்கும் புரிந்திருக்கிறது.
உங்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர் யார்? உங்கள் அடுத்த திட்டங்கள் என்ன?
என்னை தங்களின் தேசியத் தலைவராகவும் எமது படையின் தலைவராகவும் எமது மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இப்போதைக்கு இதைமட்டும்தான் சொல்ல முடியும்.
அம்னெஸ்டி போன்ற அமைப்புகள், நீங்கள் அப்பாவி மக்களைக் கேடயமாக்கிப் போரிட்டு வருவதாகக் குறை சொல்லியுள்ளதே…
இந்த குற்றச்சாட்டை வன்மையாக மறுக்கிறேன். மக்களை ஒருபோதும் கேடயமாகப் பயன்படுத்தி நாங்கள் போரிடவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த மக்களின் உரிமைகளுக்காகத்தானே போரிட்டுக் கொண்டிருக்கிறோம்…