இந்திய செவிலியர்களுக்கு சவுதியில் மிரட்டல்
புதன், 17 டிசம்பர் 2008 (21:47 IST)
ஜெட்டாவில் உள்ள மருத்துவமனையில் பணிபுரியும் 8 இந்திய செவிலியர்கள் மற்றும் ஒரு லேப் டெக்னிசியன் ஆகியோருக்கு அவர்களது நிலுவை சம்பளத்தை வழங்கும்படி நீதிமன்றம் ஆணையிட்டும் அவர்களுக்குரிய சம்பளத்தை வழங்காமல் மருத்துவமனை நிர்வாகம் மிரட்டல் விடுத்துள்ளது.
இந்திய ஊழியர்களின் நிலுவை சம்பளம், இந்தியா திரும்புவதற்கான பயணச் சீட்டு, விசா ஆகியவற்றை வழங்கும்படி அவர்கள் வேலைப் பார்த்து வந்த சித்திகா மருத்துவமனைக்கு, தொழிலாளர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது. ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அவ்வாறு வழங்க மறுத்து வருகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட இந்திய தொழிலாளர்கள் இது குறித்து விளக்கமாக எழுதி, அங்குள்ள அரபு பத்திரிகைக்கு தொலைநகல் (பேக்ஸ்) அனுப்பி பிரசுரிக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட அன்னா வர்கீஸ், நீத்து அன்டன், ஸ்வப்னா, சுமி சோஜன், சந்த்யாமோலே, கிளாரா தாமஸ், ஐவி, ஷபீனா அப்துல்காதீர், மினி கருணாகரன் ஆகியோர் ஒரு அறிக்கை அனுப்பியுள்ளனர்.
அதில், "அவர்கள் (மருத்துவமனை) எங்களது வாழ்க்கையையும், எதிர்காலத்தையும் நாசமாக்கிவிடுவதாக மிரட்டி வருகின்றனர்". "நாங்கள் மிகவும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளோம் ஏனென்றால் எங்களுக்கு உணவுப்பொருட்கள் கடனாக வழங்கிய கடைக்காரர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை. நாங்கள் என்ன இந்த மருத்துவமனையின் குற்றவாளிகளா அல்லது அடிமைகளா? கனிவுடன் இந்த செய்தியை தங்கள் பத்திரிகையில் பிரசுரம் செய்யுங்கள்" என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தில் விசாரித்ததற்கு, தொழிலாளர் நீதிமன்றம் அளித்த உத்தரவின் படி, ஏற்கனவே சில கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளோம். மீதமுள்ள கோரிக்கைகளையும் விரைவில் நிறைவேற்றுவோம் என்று கூறியுள்ளது.