பாகிஸ்தானில் பரவி வரும் பயங்கரவாதம், தீவிரவாத செயல்களை ஒழிக்க வேண்டுமானால் ஜனநாயகத்தை தழைத்தோங்கச் செய்வதுடன், ராணுவ சர்வதிகார ஆட்சியாளர்களின் கையில் நாடு சிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என ஆசிப் அலி சர்தாரி கூறியுள்ளார்.
மறைந்த பெனாசிர் பூட்டோவுக்கு ஐ.நா. மனித உரிமை விருது வழங்கப்பட்ட பின்னர் அவரது கணவரும், பாகிஸ்தான் அதிபருமான ஆசிப் அலி சர்தாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், தீவிரவாதிகளின் நடவடிக்கைகளுக்கு உடன்படாமல், அவர்களை அடியோடு அழிப்பதே பெனாசிருக்கு செய்யும் மரியாதையாக இருக்க முடியும் எனக் கூறியுள்ள சர்தாரி, தீவிரவாதம், தீவிரவாதிகளுக்கு எதிராக போராட வேண்டும் என்பதில் தமது அரசு உறுதியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தை வலுப்படுத்துவதுடன், தீவிரவாதத்திற்கு எதிராகப் போராட வேண்டும் என்ற பெனாசிரின் கொள்கையில் பாகிஸ்தான் உறுதியுடன் செயல்பட வேண்டும். ராணுவ ஆட்சியாளர்களின் பிடியில் இருந்தால் சர்வதேச பயங்கரவாதத்திற்கு புகழிடமாக மாறிவிடும் என்பதால் ஜனநாயகம் மலரச் செய்யவே நாடு கடத்தப்பட்ட பெனாசிர் கடந்தாண்டு திரும்பிதை சர்தாரி நினைவு கூர்ந்தார்.
எனவே, பெனாசிர் கனவை நிறைவேற்ற தீவிரவாதத்தை ஒழிப்பதுடன், ஜனநாயகத்தை பலப்படுத்தி உறுதியானதொரு நிலையை நாட்டில் ஏற்படுத்த வேண்டும் என சர்தாரி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் நடந்த நிகழ்ச்சியில், படுகொலை செய்யப்பட்ட பெனாசிருக்கு அறிவிக்கப்பட்ட ஐ.நா மனித உரிமை விருது, அவரது மகனும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலாவல் பூட்டோவிடம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.