மும்பை தாக்குதல் விசாரணை: இந்தியா-பாக். ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்-ம.உ.க.

புதன், 3 டிசம்பர் 2008 (18:07 IST)
நியூயார்க்: மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டறியும் விசாரணையில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நியூயார்க் மனித உரிமை கண்காணிப்பு (ம.உ.க) அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அதேவேளையில் அயல்நாட்டினர் உட்பட 200க்கும் அதிகமானோரின் உயிரைப் பலி கொண்ட மும்பை தாக்குதலுக்கு அந்த அமைப்பு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளது.

நியூயார்க்கில் செயல்பட்டு வரும் மனித உரிமை கண்காணிப்பு (Human Rights Watch) என்ற அமைப்பின் ஆசியாவுக்கான இயக்குனர் பிராட் ஆடம்ஸ் பேசுகையில், இந்தக் கோர, விரும்பத்தகாத பயங்கரவாத தாக்குதலுக்கு எந்த விதமான அரசியல் காரணம் கற்பிப்பதையும் ஏற்க முடியாது.

மும்பையில் சமீபத்திலும், டெல்லியில் செப்டம்பரிலும், பாகிஸ்தானில் மரியாட் நட்சத்திர விடுதியிலும் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களை சுட்டிக்காட்டிய அவர், இரு நாடுகளின் அரசியல் தலைவர்களும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைந்து போராட வேண்டிய தருணம் தற்போது வந்துவிட்டது என்றார்.

பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் தொடர்ந்து பலியாகி வருகின்றன. எனவே, தீர்க்கமான அணுகுமுறையுடன் இருநாட்டு அரசுகளும் பயங்கரவாதத்திற்கு எதிரான விசாரணை, பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது போன்ற ‌விடயங்களை பரஸ்பர ஒத்துழைப்புடன் மேற்கொள்ள வேண்டும்.

இருநாட்டுக்கு உட்பட்ட எல்லைகளிலும் பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது என்றார்.

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களை கண்டறியும் விசாரணையில் இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் உளவு அமைப்புகள், காவல்துறையினர் கடும் நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுவது குறித்து செய்தியாளர்கள் பிராட் ஆடம்ஸிடம் கேட்டனர்.

அதற்கு, தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களை கண்டறிவதற்காக, பிடிபட்ட குற்றவாளிகளை சித்ரவதை செய்வது அல்லது அதுதொடர்பாக கிடைப்பவர்களை மட்டும் கைது செய்வது போன்ற நடவடிக்கைகளில் இறங்கக் கூடாது.

ஏனெனில் கடந்த காலங்களில் அதுபோல் மேற்கொள்ளப்பட்ட விசாரணை முறைகளால் எந்தப் பயனும் கிடைக்கவில்லை என்பதுடன், அடுத்தடுத்து தாக்குதல்களும் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.

எனவே, இந்திய மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்ட வகையில் விசாரணையை நடத்த வேண்டும் எனக் பிராட் ஆடம்ஸ் பதிலளித்தார்.

இதேபோல் பாகிஸ்தான் ராணுவம், உளவுத்துறையிடமும், மும்பை தாக்குதல் தொடர்பான இந்தியாவின் விசாரணைக்கு பூரண ஒத்துழைப்பு அளிக்கும் படி மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு கேட்டுக் கொண்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்