நைஜீரியா கலவரம்: 400 பேர் பலி

திங்கள், 1 டிசம்பர் 2008 (11:47 IST)
நைஜீரியாவில் உள்ள ஜோஸ் நகரில் ஏற்பட்ட மதக்கலவரங்களுக்கு குறைந்தது 400 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. முஸ்லிம் மற்றும் கிறித்துவ சமயக் குழுவினரிடையே வெடித்த மோதலில் பல வீடுகளும், கடைகளும் சூறையாடப்பட்டன.

ஜோஸ் நகரில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய உள்ளூர் தேர்தலால் அங்கு கலவரம் வெடித்தது. நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இதேபோல் தெற்குப் பகுதியில் கிறித்துவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர்.

உள்ளூர் தேர்தல் காரணமாக இரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியிலும் வெடித்த கலவரங்களில் கிறிஸ்தவ தேவாலயங்கள், முஸ்லிம்களின் மசூதிகள் தீக்கிரையாகின. இதில் குறைந்தது 400 பேர் பலியாகியிருக்கலாம் என அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கலவரங்களுக்கு அஞ்சி சுமார் 7 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை விட்டு ஓடி அரசு கட்டிடங்களில் தஞ்சமடைந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்