பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே நடந்த சண்டையில் 20 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.
அந்நாட்டின் ஸ்வாட் பள்ளத்தாக்குப் பகுதியில் பதுங்கியிருந்த அல்-கய்டா, தலிபான் தீவிரவாதிகள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 15 தீவிரவாதிகள் பலியானதுடன், 6 தீவிரவாதிகள் காயமடைந்ததாகவும் பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேபோல் பாகிஸ்தான்-ஆப்கன் எல்லையில் உள்ள மொஹ்மன்ட் மாவட்டத்தின் பின்ட்யாலி கிராமத்தில் துணை ராணுவப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், தலிபான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வடமேற்குப் பகுதியில் உள்ள பெஷாவர் நகரத்தின் சுற்றுவட்டாரத்தில் கடந்த 2 வார காலமாக நடந்த தேடுதல் வேட்டையில், 25 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதுடன், 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக துணை ராணுவமும், ராணுவமும் தெரிவித்துள்ளது.