இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குத் தேவையான அரசியல் தீர்வுத் திட்டத்தை நிறைவு செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சிறிலங்கா அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அழுத்தம் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் அதற்கான தீர்வுத் திட்டத்தினை நிறைவு செய்வதற்கு விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு அரசாங்கம் தயாரில்லை எனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் பேச்சுக்களை தொடங்க வேண்டும் எனவும் மகிந்தவிடம் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனினும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்களை வெளியேற்றும் பொருட்டு நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தல் ஒன்றினை நடத்துமாறு ஜே.வி.பியிலிருந்து பிரிந்து சென்று அரசில் இணைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.