புலிகள் கடும் பதிலடி: 200 இராணுவத்தினர் பலி; 300க்கும் அதிகமானோர் படுகாயம்!
புதன், 19 நவம்பர் 2008 (17:48 IST)
இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னி மற்றும் முகமாலை பகுதிகளில் கடந்த மூன்று நாட்கள் இடம்பெற்ற மோதல்களில் சிறிலங்க இராணுவத்தினர் 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 300க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் என்று கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக கொழும்பு ஊடகங்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
முகமாலை, மாங்குளம் மற்றும் கிளிநொச்சிக்கு தென்புறம் உள்ள பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கடும் மோதல்கள் நடைபெற்று வருகின்றன.
தங்களுடைய கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி முன்னேறிவரும் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடுமையான எதிர்த்தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.
படைத்தரப்பில் பல நூறு பேர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர். இதில் முகமாலை மற்றும் மாங்குளம் களமுனைகளில் சிறிலங்க இராணுவம் நேற்று கடும் இழப்புக்களை சந்தித்துள்ளது.
ஆனால் இத்தகவல்களை வெளியிட அரசு மறுத்து வருகின்றது.
எனினும், மிக அதிக அளவிற்கு படையினர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறீ ஜெயவர்த்தனபுர மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
இதனிடையே, பாதுகாப்பு கண்காணிப்பகம் வெளியிட்ட தகவல்களில், கடந்த மூன்ற நாட்கள் இடம்பெற்ற மோதல்களில் 200 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 300க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
நூற்றுக்கணக்கான படையினர் கொழும்புக்கு அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பாதுகாப்பு கண்காணிப்பகம் வெளியிட்ட தகவல்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாங்குளம் பகுதியை 63வது படையணியினர் கைப்பற்றியுள்ளதாக கடந்த திங்கட்கிழமை தகவல் வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சகம், நேற்று அங்கு இடம்பெற்ற மோதல்கள் தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை என்று அந்த கொழும்பு ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.