பாகிஸ்தானில் ஈரான் தூதரக அதிகாரி கடத்தல்!

வியாழன், 13 நவம்பர் 2008 (14:50 IST)
பாகிஸ்தானின் முக்கிய நகரான பெஷாவரில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் ஈரான் தூதரக அதிகாரி இன்று கடத்தப்பட்டுள்ளார்.

பெஷாவரில் செயல்படும் ஈரான் தூதரகத்தில் வணிக அதிகாரியாக பணியாற்றிய ஹஸ்மதுல்லா அட்ஹர்சடி, தனது வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு காரில் சென்று கொண்டிருந்த போது பெஷாவரின் புறநகர்ப் பகுதியான ஹயாதாபாத்திற்கு அருகே துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்களால் கடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், ஹஸ்மதுல்லாவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த காவலரையும் சுட்டுக் கொன்று விட்டு மர்ம நபர்கள் அவரை கடத்திச் சென்றதாக ஈரான் தலைமைத் தூதர் தெரிவித்துள்ளார். இந்த கடத்தல் சம்பவத்திற்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை.

ஈரான் தூதர் கடத்தப்பட்ட ஹயாதாபாத் பகுதி, தலிபான்களின் ஆதிக்கம் அதிகமுள்ள கைபர் ஏஜென்ஸி பகுதியின் அங்கமான ஜம்ருத் மாவட்டத்திற்கு அருகே உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி அந்நாட்டுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் அப்துல் ஃபராஹியும் மர்ம நபர்களால் ஹயாதாபாத் அருகே கடத்தப்பட்டது நினைவில் கொள்ளத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்