போலி கடன் அட்டை தயாரித்து மோசடி: இந்தியருக்கு சிறை!

புதன், 29 அக்டோபர் 2008 (15:38 IST)
லண்டன்: லண்டனில் போலி கடன் அட்டைகளைத் தயாரித்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக இந்தியர் ஒருவருக்கு பிரிட்டன் நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அனுப் படேல் என்ற இந்தியரும், இவரது கூட்டாளிகளும் சேர்ந்து போலி கடன் அட்டைகளைத் தயாரித்து, அவற்றின் மூலம் 2 மில்லியன் பவுண்டுகள் அல்லது 3 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான தொகையை மோசடி செய்து கொள்ளை அடித்துள்ளதுள்ளனர்.

போலி கடன் அட்டைகளைத் தயாரித்து அதனை ஆசியா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் பயன்படுத்தி இந்த மோசடியை நிறைவேற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கும்பலை தற்போது பிடித்திருக்கா விட்டால் இவர்கள் உலகம் முழுதும் சுமார் 16 மில்லியன் பவுண்டுகள் அளவிலான தொகையை கொள்ளையடித்திருப்பார்கள் என்று பிரிட்டன் காவல்துறை கூறியுள்ளது.

கிங்ஸ்டன் பல்கலைக்கழக கணினி பட்டதாரியான அனுப் படேல், அசல் கடன் அட்டைகளின் ரகசிய குறியீட்டு எண்களையும் தகவல்களையும் திருடி அதனை தனது போலி கடன் அட்டையில் சேர்த்து இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளார்.

இவர் தயாரித்த போலி கடன் அட்டைகளை இவரது கூட்டாளியான அந்தோனி தாமஸ் தாய்லாந்து உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் மாற்றுவார். ஏனெனில் இந்த நாடுகளில் மோசடியில் இருந்து தடுக்கக்கூடிய போதிய பாதுகாப்பு முறைகள் இல்லாததை அவர்கள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

சுமார் 19,000 அசல் கடன் அட்டைகளின் விவரங்களை அனுப் படேல் சேகரித்துள்ளார். லண்டன் சாலை ஒன்றில் உள்ள பெட்ரோல் நிலையத்திலிருந்து இவர்கள் கடன் அட்டைகளின் தகவல்களை சேகரித்துள்ளனர் என்றும், இதற்காக ரகசிய காமிராக்கள், தரவு வாசிப்பு தொழில் நுட்பம் ஆகியவற்றையும் பயன்படுத்தியுள்ளதாக காவல்துறை சந்தேகிக்கிறது.

பெட்ரோல் நிலையங்களில் கடன் அட்டையை பயன்படுத்தி பெட்ரோல் நிரப்புவது பற்றி ஏற்கனவே பிரிட்டன் நிறைய எச்சரிக்கைகளை மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த குறிப்பிட்ட பெட்ரோல் நிலையத்தில் கடன் அட்டைப் பிரயோகம் அதிகம் என்பதை அனுப் படேல் தெரிந்து வைத்திருந்தார் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். இருப்பினும் எப்படி ரகசிய கேமராவையும், பிற தொழில் நுட்பத்தையும் அங்கு பொருத்தினர் என்பது குறித்து இன்னமும் தெரியவில்லை.

2006-ஆம் ஆண்டு முதலே காவல்துறை இந்த கும்பலின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்துள்ளது. கடைசியாக தாய்லாந்திலும் லண்டன் விமான நிலையத்திலும் அனுப் படேலின் கூட்டாளிகள் கைது செயப்பட்டதை அறிந்தவுடன் அவர் காவல்துறையில் சரணடைந்தார்.

இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்த போது, 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்சிலும் அனுப் படேல் தன் கைவரிசையைக் காட்டியதற்காக 2 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட தகவலை அரசு வழக்கறிஞர் டேவிட் போவால் நீதிமன்றத்தில் வெளியிட்டார்.

இந்தியாவில் பிறந்த அனுப் படேல் தனது 2வது வயதிலேயே பிரிட்டன் சென்று அங்கேயே வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்