ஜப்பான் பிரதமருடன் மன்மோகன் சிங் பேசுகிறார்

செவ்வாய், 21 அக்டோபர் 2008 (19:33 IST)
அரசு முறைப் பயணமாக இன்று ஜப்பான் சென்றடைந்த பிரதமர் மன்மோகன் சிங், புதன்கிழமையன்று அந்நாட்டு பிரதமர் டாரோ அசோவுடன் இருதரப்பு பேச்சுகளை நடத்தவுள்ளார்.

இந்தப் பேச்சின்போது, உலக அளவில் ஏற்பட்டு வரும் நிதிப் பற்றாக்குறை பிரச்சினை, அணுசக்தி துறையில் இந்தியாவும், ஜப்பானும் இணைந்து செயல்படுவது உள்ளிட்டவை இடம்பெறக்கூடும் என்று ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

டோக்கியோ சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங், அவரது மனைவி குர்சரண் கவுர் ஆகியோருக்கு அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹிரோப்யூமி நகாசோன் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பினை அளித்தார்.

டோக்கியோ பயணம் குறித்துக் கூறிய மன்மோகன் சிங், ஜப்பானுடனான இருதரப்பு நல்லுறவு மேலும் வலுப்பெறும் என்றும், ஆசிய பாதுகாப்பு கட்டமைப்பில் தமது பயணத்தினால் ஏற்படும் நல்லுறவு முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

ஆசியா மற்றும் உலக அளவில் அமைதி, நிலைத்தன்மை, முன்னேற்றத்திற்கு தமது ஜப்பான் பயணம் வழிவகுக்கும் என்றும் பிரதமர் கூறினார்.

பிரமர் மன்மோகன் சிங் - ஜப்பான் பிரதமர் அஸோ இடையேயான இருதரப்பு பேச்சுகள் நாளை டோக்கியோவில் நடைபெறுகிறது.

டெல்லி-மும்பை இடையேயான தொழிற்சாலை திட்டத்தை நடைமுறைப்படுத்த ஜப்பானின் உதவியும் கோரப்படும் என்றும் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்