123 ஒப்பந்தம் இப்பொழுது கையெழுத்தில்லை: கோண்டலீசா ரைஸ்!

சனி, 4 அக்டோபர் 2008 (13:18 IST)
அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ள இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்பத்த வழிவகுக்கும் 123 ஒப்பந்தத்தில் தனது இந்தப் பயணத்தில் கையெழுத்திடப்படாது என்று இந்தியா வந்துள்ள அமெரிக்க அயலுறவு அமைச்சர் கோண்டலீசா ரைஸ் கூறியுள்ளார்.

தனது இந்தியப் பயணத்தை துவக்குவதற்கு முன்னர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய கோண்டலீசா ரைஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த விவரத்தை அமெரிக்க அயலுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளதாக பி.டி.ஐ. செய்தி கூறுகிறது.

“அமெரிக்க நாடாளுமன்றம் 123 ஒப்பந்தத்த வரைவிற்கு ஒப்புதல் அளித்துவிட்டாலும், இன்னமும் நிர்வாக ரீதியான பல விவரங்களை முறைபடுத்த வேண்டியுள்ளது. நாடாளுமன்றம் நிறைவேற்றிய வரைவை அதிபர் புஷ் பார்த்து, விரைவில் கையெழுத்திடுவார்” என்று கூறியுள்ள கோண்டலீசா ரைஸ், நிர்வாக ரீதியான முறைப்படுத்துதல் என்றால் என்ன என்பதையும் விளக்கியுள்ளார்.

123 ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான வழிமுறைகள், அவைகள் மிகவும் நுணுக்கமானவை, வகுக்கப்பட்டப் பின்னரே இரு நாடுகளும் கையெழுத்திடும் என்று ரைஸ் கூறியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையில் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஒத்துழைப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான விரிவான உறவை பயன்படுத்தி மேற்கொண்டு என்னென்ன செய்யலாம் என்பதை சிந்திக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

“எனது இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம், இந்திய அமெரிக்க உறவில் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்பது குறித்து இந்திய அரசுடன் பேசப்போவதா” கோண்டலீசா ரைஸ் கூறியுள்ளார்.

இந்திய அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு என்பது இந்தியாவுடன் அமெரிக்க மேற்கொள்ள உத்தேசித்துவரும் விரிவான இருதரப்பு உறவின் ஒரு அங்கமே என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது கோண்டலீசா ரைஸ் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்