பாகிஸ்தானில் பயங்கரவாதம் தூண்டப்படுவதை ஜர்தாரி தடுப்பார்: பிரணாப்!

புதன், 1 அக்டோபர் 2008 (12:02 IST)
பாகிஸ்தானின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள ஆசிப் அலி ஜர்தாரி, அந்நாட்டில் பயங்கரவாதம் தூண்டப்படுவதை தடுப்பதுடன், அதன் எல்லைக்குள் பயங்கரவாதத்திற்கு புகழிடம் தரப்படாது என்ற உத்தரவாதத்தையும் நிறைவேற்றுவார் என இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

நியூயார்க்கில் நடந்த ஆசிய சொசைட்டி உறுப்பினர்கள் சார்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துப் பேசிய பிரணாப் முகர்ஜி, ஒரு நாடு தனது அண்டை நாட்டைத் தேர்வு செய்ய முடியாது என்றாலும், அண்டை நாடுகளுடன் நட்புறவுடன் அமைதியாக வாழ வேண்டுமா அல்லது இடையூறாத பதட்டத்துடன் வாழ வேண்டுமா என்பதை தீர்மானித்துக் கொள்ள முடியும். இந்த ‌விடயத்தில் இந்தியா அமைதியுடன் வாழ்வதையே விரும்புகிறது என்றார்.

ஜனநாயகப் பாதைக்கு திரும்பியுள்ள பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்களை இந்தியா வரவேற்பதாகவும், அந்நாட்டில் புதிய அரசு அமைந்த பின்னர் நடத்தப்பட்ட இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் இரு நாடுகளும் சிறப்பான பலனடைந்துள்ளதாகவும் பிரணாப் முகர்ஜி கூறினார்.

இந்தியாவிலும், காபூலில் உள்ள இந்திய தூதரகத்தின் மீதும் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் பாகிஸ்தானுக்கு தொடர்பிருப்பதாக வெளியான தகவல்கள் குறித்து அப்போது கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளிக்கையில், நியூயார்க்கில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த ஐக்கிய நாடுகள் பொது அவைக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேசிய ஜர்தாரி, பாகிஸ்தான் எல்லைக்குள் பயங்கரவாதத்திற்கு புகழிடம் தரப்படாது என உத்தரவாதம் அளித்ததைக் குறிப்பிட்ட பிரணாப் முகர்ஜி, இந்த உத்தரவாதத்தை ஜர்தாரி நிறைவேற்றுவார் என தாம் நம்புவதாக கூறினார்.

இந்தியாவில் அதிகளவில் கிடைக்கும் தோரியத்தை அணு உலைகளுக்கு எரிபொருளாகப் பயன்படுத்தினால், இதற்காக பிறநாடுகளை சார்ந்திருப்பதை நாம் தவிர்க்க முடியுமே என்ற கேள்விக்கு, இவ்‌விடயத்தில் இந்தியா உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாலும், இதற்குத் தேவையான சில தொழில்நுட்பங்கள் நம்மிடம் இல்லை.

ஆனால் தற்போது அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழுவின் அனுமதி இந்தியாவுக்கு கிடைத்துள்ளதால், அந்த தொழில்நுட்பங்கள் நமக்கு கிடைக்கும் என்று பிரணாப் முகர்ஜி பதிலளித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்