பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ-க்கு புதிய தலைவர் நியமனம்!

செவ்வாய், 30 செப்டம்பர் 2008 (13:30 IST)
பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ-யின் புதிய தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் அஹ்மத் ஷுஜா பஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

ராவல்பிண்டி ராணுவ தலைமையக உத்தரவின் படி, ஐ.எஸ்.ஐ-யில் 14 புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக பாகிஸ்தானில் ஒளிபரப்பாகும் டான் தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை ராணுவ நடவடிக்கை பிரிவின் நிர்வாக இயக்குனராக பதவி வகித்த அஹ்மத் ஷுஜா பஷா, ஐ.எஸ்.ஐ தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் இப்பதவியில் இருந்த லெப்டினன்ட் ஜெனரல் நடீம் தாஜ், முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப்பின் தூரத்து உறவினர் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

அதிபர் பதவியில் இருந்து முஷாரஃப் விலகிய பின்னர் ஐ.எஸ்.ஐ-யில் விரைவில் உயர் அதிகாரிகள் மா‌ற்ற‌ம் மேற்கொள்ளப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. கடந்த ஜூலை 7ஆம் தேதி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இயங்கிய இந்திய தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் ஐ.எஸ்.ஐ-க்கு தொடர்பு இருப்பதாக கிடைத்த உறுதியான தகவல்களைத் தொடர்ந்து ஐ.எஸ்.ஐ அமைப்பில் அதிரடி மாற்றம் மேற்கொள்ள அமெரிக்கா வலியுறுத்திய நிலையில், இன்று அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் ராணுவ தளபதியாக முஷாரஃப்பால் நியமிக்கப்பட்ட அஷ்பக் பர்வேஸ் கயானி, தாம் பதவியேற்றது முதல் அந்நாட்டு அரசியல் விவகாரங்களுடான ராணுவத் தொடர்பை சிறிது சிறிதாக துண்டித்ததுடன், பாகிஸ்தான் எல்லைப்புறத்தில் கிராமங்களில் காணப்படும் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கி விட்டது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்