பிலிப்பைன்ஸில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கம்!

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே உள்ள மின்டோரோ பகுதியில் அடுத்தடுத்து 2 சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

இன்று காலை அந்நாட்டு நேரப்படி 11.04 மணியளவில் (இந்திய நேரப்படி காலை 8.54) மணிலாவில் இருந்து 145 கி.மீ தொலைவில் உள்ள மின்டோரோ மாகாணப் பகுதியில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக அந்நாட்டு எரிமலை மற்றும் பூகம்ப ஆய்வு மையத் தலைவர் ரினடோ சோலிடிம் தெரிவித்துள்ளார்.

இதில் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவான முதல் நிலநடுக்கம் பூமிக்கடியில் 81 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டதாகவும், இதையடுத்து 5 நிமிடம் கழித்து மீண்டும் ஏற்பட்ட 2வது நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவானதாகவும் சோலிடிம் கூறியுள்ளார்.

இந்த 2 நிலநடுக்கங்களும் அப்பகுதியில் இருந்து 220 கிமீ தொலைவில் உள்ள பம்பன்கா, படான் ஆகிய மாகாணங்கள் வரை உணரப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் உயிர்பலி குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்