சிறுமிகளை சீரழித்த ஆசிரியருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

சீனாவில் 39 பள்ளிச் சிறுமிகளுக்கு பாலியல் தொலை கொடுத்த பள்ளித் தலைமை ஆசிரியருக்கு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை அந்நாட்டு அரசு நிறைவேற்றியுள்ளது.

அந்நாட்டின் ஜிங்நிங் கவுன்டி பகுதியில் உள்ள 3 ஆரம்பப் பள்ளிகளில் பயின்ற 39 மாணவிகளை (ஏழு முதல் 14 வயதிற்கு உட்பட்டவர்கள்), கடந்த 1988-2006ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், தலைமை ஆசிரியராக பணியாற்றிய லுவோ யான்லின் (வயது 48) பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

யான்லின் வழக்கை விசாரித்த நீதிபதி, இவரது பாலியல் கொடுமைகளால் பள்ளிச் சிறுமிகள் உடல் மற்றும் மன ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், யான்லினின் நடவடிக்கை சமூகத்தில் ஆசிரியருக்கு உள்ள மரியாதை, கவுரவத்தை பாழ்படுத்தியுள்ளதாகவும் கூறியதுடன், அவருக்கு கடந்தாண்டு ஜூலை 4ஆம் தேதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இதையடுத்து அந்நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள கான்சு மாகாணத்தில் நேற்று அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2006 ஆகஸ்ட் 14ஆம் தேதி தலைமை ஆசிரியர் யான்லினால் பாலியல் கொடுமைக்கு ஆளான 2 மாணவிகள் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரித்தனர். அதன் பிறகே அவரால் 39 மாணவிகள் சீரழிக்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியானது.

அவரால் பாதிக்கப்பட்ட ஷாங் என்ற பெண் (தற்போது கல்லூரியில் படிக்கிறார்) கூறுகையில், யான்லினிடம் பயின்ற போது தங்களுக்கு 12 வயது என்றும், அப்போது அவர் எங்களை மிரட்டி 10க்கும் மேற்பட்ட முறை கற்பழித்துள்ளார் என்றும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்