சிறிலங்கப் படைத் தலைமையகம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்: 12 படையினர் பலி!
செவ்வாய், 9 செப்டம்பர் 2008 (14:48 IST)
வன்னியில் உள்ள சிறிலங்கப் படையினரின் கூட்டுத் தலைமையகம் மீது இன்று அதிகாலை 2 மணி நேரத்திற்கும் மேலாக விடுதலைப் புலிகள் நடத்திய தரைவழி, வான்வழித் தாக்குதல்களில் 12 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 26 படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
சிறிலங்கப் படையினர் வெளியிட்டுள்ள சேத விவரங்களின்படி, சிறிலங்க ராணுவப் படையினர் 9 பேரும், சிறிலங்க விமானப் படையினர் 2 பேரும், காவலர் ஒருவரும் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் பலியாகியுள்ளதாக தமிழ்நெட் இணைய தளம் தெரிவிக்கிறது.
வன்னியில் உள்ள சிறிலங்கப் படையினரின் கூட்டுத் தலைமையகத்தின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் 10 க்கும் மேற்பட்ட கரும்புலி கமாண்டர்கள் ஊடுருவி, சிறிலங்கப் படையினருக்குப் பலத்த சேதம் விளைவிக்கும் வகையில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கரும்புலிகள் தாக்குதலைத் துவங்குவதற்கு முன்பு அதிகாலை 2.30 மணியளவில் விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. இதனால் வவுனியா நகரம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது.
வவுனியா நகரில் இதுவரை 11 முறை பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளதாகவும், அதிகாலை 5.00 மணி முதல் துப்பாக்கிச் சண்டை சத்தங்கள் கேட்டு வருவதாகவும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் விமானங்களில் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக கொழும்பில் உள்ள சிறிலங்கப் படைத் தரப்பு அதிகாரிகள் தெரிவித்தாலும், அப்படி எந்த விமானமும் வானில் இருந்து விழவில்லை என்று பொது மக்கள் தெரிவித்துள்ளனர் என்று தமிழ்நெட் இணைய தளம் கூறுகிறது.
விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலிற்குப் பிறகு சிறிலங்கப் படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலின் சத்தங்களை பொது மக்கள் உறுதி செய்துள்ளனர்.
இதற்கிடையில், இன்று அதிகாலை 4.00 மணி முதல் முல்லைத்தீவு, கிளிநொச்சி பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுட்ட சிறிலங்க விமானப் படை விமானங்கள் இரண்டு இடங்களில் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளன.
அதிகாலை 4.20 மணி முதல் 5.10 மணி வரை புதுக்குடியிருப்புப் பகுதியில் மூன்று முறை சிறிலங்க விமானப் படை விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. சுப்பிரமணிய சாமி வித்யாலயம் பள்ளி உள்ளிட்ட பொது மக்கள் பயன்படுத்தும் இடங்கள் மிகுந்த நெருக்கடியான குடியிருப்புப் பகுதியில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இதில் சுலோச்சனா என்ற 50 வயதுப் பெண்மணி ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், 5 கடைகள் தரைமட்டமாகி உள்ளதாகவும் முதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலை 6.40 மணியளவில் பூநகரி அருகில் சிறிலங்க விமானப் படை விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் ஏற்பட்ட சேத விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
விடுதலைப் புலிகளின் விமானம் வீழ்ந்தது?
இதற்கிடையில், வன்னியில் உள்ள கூட்டுத் தலைமையகம் மீது தாக்குதல் நடத்த முயன்று தோல்வியடைந்து திரும்பிய விடுதலைப் புலிகளின் விமானம் ஒன்றை முல்லைத்தீவு பகுதியில் சிறிலங்க விமானப் படை விமானங்கள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக சிறிலங்கப் படைத் தரப்பு தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்க விமானப் படைத் தளத்தில் இருந்து புறப்பட்ட சிறிலங்க விமானப் படை விமானங்கள், விடுதலைப் புலிகளின் விமானங்களைத் துரத்திச் சென்று இன்று அதிகாலை 4.00 மணியளவில் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 1 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் சிறிலங்க விமானப் படை பேச்சாளர் ஜானக நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வன்னி கூட்டுப் படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலை சிறிலங்கப் படைத் தரப்புப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரவும் உறுதி செய்துள்ளார்.
சிறிலங்கப் படையினர் நடத்திய எதிர்த் தாக்குதலில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் 10 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.