பாகிஸ்தானில் நடைபெறும் அதிபர் தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் வேட்பாளர் ஆசிப் அலி ஜர்தாரிக்கு 60% வாக்குகள் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்தம் 700 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், அந்நாட்டின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை நடக்கிறது.
இதில் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பி.பி.பி) சார்பில் அதன் இணைத் தலைவர் ஆசிப் அலி ஜர்தாரியும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) சார்பில் முன்னாள் தலைமை நீதிபதி சயீத்-சமன் சித்திக் மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (கியூ) சார்பில் முஷாஹித் ஹுசைன் சையத் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அந்நாட்டின் மிகப் பெரிய அரசியல் கட்சியான பி.பி.பி-க்கு நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதும், மேலும் பல சிறிய கட்சிகளை பி.பி.பி தனது வசம் இழுத்துள்ளதாலும், அதிபர் தேர்தலில் அக்கட்சி வேட்பாளர் ஜர்தாரிக்கு 60 விழுக்காடு வாக்குகள் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளும் பி.பி.பி. கூட்டணியால் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்படலாம் என்ற நிலையைத் தொடர்ந்து அதிபர் பதவியில் இருந்து பர்வேஸ் முஷாரஃப் கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி விலகியது நினைவில் கொள்ளத்தக்கது.