இந்தியாவிற்கு விலக்குடன் அனுமதி: என்.எஸ்.ஜி. இன்று முடிவு!
வெள்ளி, 5 செப்டம்பர் 2008 (15:41 IST)
அணு சக்தி தொழில்நுட்ப நாடுகளுடன் வணிகம் செய்வதற்கு விலக்குடன் கூடிய அனுமதி கோரி இந்தியா சார்பில் முன்மொழியப்பட்டுள்ள தீர்மான வரைவின் மீது, அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழு (என்.எஸ்.ஜி.) இன்று இறுதி முடிவை எடுக்கவுள்ளது.
அணு ஆயுதப் பரவல் தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்திடாத இந்தியாவிற்கு அணு சக்தி தொழில்நுட்ப வணிகம் மேற்கொள்ள விலக்குடன் (Waiver) கூடிய அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி இந்தியா சார்பில் அமெரிக்கா சமர்ப்பித்துள்ள தீர்மான வரைவில், தங்களது வலியுறுத்தலின்பேரில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பிறகு, அதன் மீது என்.எஸ்.ஜி. (Nuclear Suppliers Group _ NSG) இன்று இறுதி முடிவை எடுக்கவுள்ளது.
முதல்நாள் கூட்டத்தில் (நேற்று) நியூசிலாந்து, ஆஸ்ட்ரியா, நார்வே, அயர்லாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள், அணு ஆயுதப் பரவல் தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்திடாத இந்தியாவிற்கு அணு சக்தி தொழில்நுட்ப வணிகம் செய்ய விலக்குடன் கூடிய அனுமதி வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், கூட்டத்தின் இறுதி நாளான இன்று எப்படியும் தீர்மான வரைவிற்கு ஒப்புதலைப் பெற்றுவிட வேண்டும் என்று இந்தியாவும், அமெரிக்காவும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
அதன் ஒருபகுதியாக இன்று இந்தியாவின் சார்பில் சில மூத்த அதிகாரிகள், அதிருப்தியில் உள்ள என்.எஸ்.ஜி. நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.
இதற்கிடையில், "நாங்கள் முடிவினை நெருங்கிவிட்டோம். விரைவில் அதனை வெளியிடுவோம்" என்று மேற்கத்திய நாடு ஒன்றின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய முதல்சுற்றுப் பேச்சிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க பிரதிநிதிகள் குழுவின் தலைவர் வில்லியம் பர்ன்ஸ், "நாங்கள் முன்னேற்றத்தை நோக்கி நிலையாக நகர்ந்து வருகிறோம். தொடர்ந்து முன்னேறுவோம். இந்தியாவிற்கு ஆதரவான முடிவைப் பெறுவோம்." என்றார்.