‘குஸ்தவ்’ சூறாவளியால் பீதி: நியூஆர்லியான்ஸ் மக்கள் வெளியேற்றம்!
திங்கள், 1 செப்டம்பர் 2008 (17:38 IST)
கரீபியன் கடலில் உருவான ‘குஸ்தவ்’ சூறாவளி மெக்ஸிகோ வளைகுடா பகுதியை இன்று அடைந்ததைத் தொடர்ந்து, நியூ ஆர்லியான்ஸ் நகரிலும் கனமழை துவங்கியுள்ளது. சூறாவளியின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்பதால் நியூ ஆர்லியான்ஸ் மக்கள் அந்நகரை விட்டு வெளியேறி வருகின்றனர்.
கரீபியன் கடல் பகுதியில் ஆண்டுதோறும் பல சூறாவாளிகள் உருவாகி அமெரிக்க பகுதிகளை தாக்கி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ‘கேத்ரீனா’ எனப் பெயரிடப்பட்ட சூறாவளி நடத்திய கோரத் தாக்குதலில் நியூ ஆர்லியான்ஸ் நகர் கடுமையாக சேதமடைந்தது. அப்போதைய புஷ் அரசு நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள முடியாத அளவுக்கு சூறாவளியின் தாக்கம் மிக வலிமையாக இருந்தது.
இந்நிலையில், தற்போது கரீபியன் கடல் பகுதியில் உருவான ‘குஸ்தவ்’ சூறாவளி, அமெரிக்கா அருகே உள்ள கியூபாவை நேற்று தாக்கியதில், பல இடங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
இந்நிலையில், குஸ்தவ் சூறாவளி அமெரிக்காவின் நியூ ஆர்லியான்ஸ் மற்றும் லூசியானா பகுதியை நாளை தாக்கும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அப்போது சூறாவளியின் தாக்கம் மணிக்கு 220 மைல் வேகத்தில் இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இதையடுத்து நியூ ஆர்லியன்ஸ் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அந்நகர மேயர் ராய் நகின் விடுத்த வேண்டுகோளை ஏற்று, மக்கள் கூட்டம் கூட்டமாக பாதுகாப்பான இடத்துக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.