திரிகோணமலை துறைமுகத்தின் மீது விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதல்!
புதன், 27 ஆகஸ்ட் 2008 (13:47 IST)
இலங்கையில் திரிகோணமலை துறைமுகத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் அடுத்தடுத்து குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் சிறிலங்கக் கடற்படையினர் 11 பேர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரிகோணமலை துறைமுகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9.00 மணியளவிலும், நள்ளிரவு 12.15 மணியளவிலும் பலத்த வெடிச் சத்தத்ங்கள் கேட்டுள்ளன.
இது தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலின் சத்தம்தான் என்பதை உறுதி செய்துள்ள சிறிலங்கக் கடற்படையினர், தங்கள் தரப்பில் ஏற்பட்டுள்ள சேத விவரங்களைத் தெரிவிக்கவில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலைத் தொடர்ந்து திரிகோணமலை துறைமுகத்தில் இருந்து அரை மணி நேரத்திற்கு மேலாக வானை நோக்கி எறிகணை வீச்சு நடந்ததாலும், சிறிலங்கக் கடற்படைத் தலைமையகத்தைச் சுற்றி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதாலும் திரிகோணமலை நகரம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது.
திரிகோணமலை மருத்துவமனையில் சிறிலங்கக் கடற்படையினர் 11 பேர் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், திரிகோணமலை முதல் கிளிநொச்சி வரை சிறிலங்க விமானப்படை விமானங்கள் பறந்த வண்ணம் உள்ளன. இதனாலும், சிறிலங்கக் கடற்படையின் வானை நோக்கிய எரிகணை வீச்சினாலும் பொது மக்கள் பீதியடைந்துள்ளனர். திரிகோணமலை பகுதி முழுவதும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பில் இந்தத் தாக்குதல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.