என்.எஸ்.ஜி.-யின் ஒப்புதலைப் பெற முயற்சிப்போம்: அமெரிக்கா!
திங்கள், 25 ஆகஸ்ட் 2008 (19:58 IST)
அணு சக்தி தொழில்நுட்ப நாடுகளுடன் வணிகம் செய்வதற்கு விலக்குடன் கூடிய அனுமதி கோரி இந்தியா வைத்துள்ள வரைவிற்கு அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழுவின் (என்.எஸ்.ஜி.) ஒப்புதலைப் பெறுவதற்கு முயற்சிப்போம் என்று அமெரிக்கா உறுதியளித்துள்ளது.
என்.எஸ்.ஜி.-யின் ஒப்புதலைப் பெறுதலாகிய முக்கிய நடவடிக்கை உள்பட இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த தேவையான எல்லா நடவடிக்கைகளையும் விரைவில் இறுதிப்படுத்த, இந்தியாவுடன் சேர்ந்து செயல்படுவதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது என்று இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் டேவிட் சி முல்போர்ட் தெரிவித்துள்ளார்.
"பன்னாட்டுச் சமூகத்தின் நலன்களுக்கு உட்பட்டு, என்.எஸ்.ஜி.யில் இந்தியாவிற்கு விலக்குடன் கூடிய அனுமதி பெறத் தேவையான எல்லா முயற்சிகளிலும் அமெரிக்கா இந்தியாவின் தோளோடு தோள் நின்று செயலாற்றும்" என்று டேவிட் சி முல்போர்ட் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
"என்.எஸ்.ஜி.-யின் அடுத்த கூட்டம் செப்டம்பர் 4 இல் நடக்கும் என்ற நிலையில், அவ்வமைப்பில் உறுப்பினர்களாக உள்ள எல்லா நாடுகளின் அரசுகளுடனும் உரிய முறையில் பேசி இந்தியாவிற்கு சாதகமான நிலையை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும" என்றும் அவர் கூறியுள்ளார்.
என்.எஸ்.ஜி.- யில் இந்தியாவின் வரைவிற்கு ஒப்புதல் பெறும் நடவடிக்கைகளில், ஜூலை 18, 2005 கூட்டு அறிக்கையில் உறுதியளித்துள்ளபடி அமெரிக்கா முழு ஒத்துழைப்பை அளிக்குமா என்று அண்மையில் எழுந்துள்ள கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் டேவிட் சி முல்போர்ட்டின் அறிக்கை அமைந்துள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த என்.எஸ்.ஜி. கூட்டத்தில், இந்தியாவிற்கு விலக்குடன் கூடிய அனுமதி அளிப்பது குறித்து எந்தவிதமான முடிவும் எடுக்கப்படாத நிலையில், அமெரிக்கா ஒத்துழைப்பு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.