அதிபர் பதவியில் இருந்து முஷாரஃப் விலகியதை அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களான ஒபாமாவும், மெக்கெய்னும் வரவேற்றுள்ளனர். முஷாரஃப்பின் இந்த முடிவு கடந்த சில நாட்களாக பாகிஸ்தானில் நிலவிய அரசியல் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் பராக் ஒபாமா, அந்நாட்டு மக்களின் நலன் கருதி முஷாரஃப் சரியான நேரத்தில் அதிபர் பதவியில் இருந்து விலகியுள்ளதாகவும், இப்பிரச்சனையால் பாகிஸ்தானை ஆளும் கூட்டணி கடந்த சில நாட்கள் செயல்பட முடியாமல் முடங்கியதையும் குறிப்பிட்டார்.
முஷாரஃப் பதவி விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள மாற்றத்தை பயன்படுத்தி தீவிரவாத ஒழிப்பு, உணவு மற்றும் எரிசக்தி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது, பாகிஸ்தானில் நிலையான மற்றும் பாதுகாப்பான ஜனநாயகத்தை உருவாக்குவது உள்ளிட்ட பணிகளில் அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஒபாமா வலியுறுத்தினார்.
அதிபர் பதவியில் இருந்து முஷாரஃப் விலகியது பாகிஸ்தானின் அரசியல் ஸ்திரத்தன்மையை மேலும் வலுவாக்கும் எனக் குறிப்பிட்டுள்ள குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் மெக்கெய்ன், அல்கய்டா மற்றும் இஸ்லாமிய தீவிரவாதிகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் அரசு, அவற்றை முற்றிலுமாக ஒழிக்க அமெரிக்காவுடன் எதிர்காலத்தில் மேலும் நட்புறவுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.